PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

எட்டு வகைத் திருமணங்கள்

ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கதேரிலே!

அடுத்து ஆஸுரம் என்னும் முறை ஆகும். ஆஸுரம் என்றால் ஒரு பெண்ணுக்குப் பொருத்தமில்லாத மாப்பிள்ளை/வரன் பணக்காரனாக இருப்பான். நிறையப் பணத்தைப் பெண் வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்துப் பெண்ணைத் தனக்குக் கொடுக்கும்படி செய்வது தான் ஆஸுரம். இங்கே பெண்ணின் சம்மதம் கேட்கப் படுவது இல்லை. பணத்தைக் கொடுத்துப் பெண்ணை அவனுக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகத் திருமணம் செய்து கொள்வான். மேலே சொன்னவற்றில் மூன்றாவதான ஆர்ஷத்தில் பசுக்களைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றது போல் தான் இதுவும் என நினைத்தீர்களானால் தப்பு. ஆர்ஷ முறைப்படி கல்யாணம் செய்துக்கிறவங்க அநேகமாய் தவ வாழ்க்கையில் ஈடுபட்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தவ வாழ்க்கைக்கு உதவக் கூடிய பெண்ணாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் அப்படிப் பட்ட பெண் எனில் பசுக்களைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து கன்யாதானம் பெறுவார்கள். ஆனால் இங்கேயோ பணத்தைக் காட்டி ஆசை காட்டி வசியம் செய்து பெண்ணைப் பெறுவது என்பது நடப்பதால் இதையும் இரண்டாம்பட்சமாகவே கருத வேண்டும்.

சுமார் முந்நூறு வருடங்கள் முன்பிருந்து சமீப காலம் வரையிலும் பலரும் முதல் மனைவி இறந்து போய்ப் பல வருடங்கள் வயது வித்தியாசத்தில் இரண்டாம் கல்யாணம், மூன்றாம் கல்யாணம் என்றெல்லாம் பண்ணிக் கொண்டது ஆஸுர வகையைச் சேர்ந்தது தான்.

அடுத்தது காந்தர்வ விவாஹம். இதில் பெண்ணும், பையரும் ஒருவருக்கொருவர் மனம் ஈடுபட்டு மனம் ஒன்றிப் போய் அவர்களாகவே பெரியவர்கள் துணையோ, அவர்கள் சம்மதமோ இல்லாமல் பண்ணிக் கொள்வது ஆகும். இந்த காந்தர்வ விவாஹம் என்றதுமே பலருக்கும் நினைவில் வருவது துஷ்யந்தனும், சகுந்தலையும் செய்து கொண்ட காந்தர்வ விவாஹம் தான். எவருக்கும் தெரியாமல் இருவரும் செய்து கொண்ட திருமணம் காந்தர்வ விவாஹம் எனப்படும். தற்காலங்களில் பெண்ணும், பிள்ளையும் வீட்டை விட்டு ஓடிப் போய்க் கோயில்களில், திருமணப் பதிவு அலுவலகங்களில் செய்து கொள்ளும் திருமணங்கள் கூட ஒரு வகையில் காந்தர்வ விவாஹமே ஆகும்.

அடுத்தது ராக்ஷஸம். நம்ம கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் நடந்தது ராக்ஷஸ விவாஹமே. என்ன ஆச்சரியமாப் பார்க்கிறீங்களா? பெண்ணுக்குத் தாய், தந்தை ஏற்பாடு செய்யும் வரன் பிடிக்காமல் வேறொருவரை மணக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து, அந்தக் குறிப்பிட்ட நபருக்குத் தன் ஆசையையும் தெரிவித்துத் தன்னைத் தன் பெற்றோர் நிச்சயித்திருக்கும் வரனிடமிருந்து காப்பாற்றி அழைத்துப் போகும்படி வேண்டிக் கொண்டாள் எனில் அந்த ஆண் அவள் ஆசையை நிறைவேற்றியாக வேண்டும். தனக்குப் பிடிக்காத இடத்தில் பெண் திருமணம் ஆகிச் செல்வதை ஒருபோதும் நம் சமூகம் அனுமதிக்கவே இல்லை. ஆகவே ருக்மிணிக்கு சிசுபாலனைப் பிடிக்கவில்லை என்றும் சுயம்வரம் என்பது பெயருக்குத் தான் வைத்திருக்கிறார்கள் என்பதையும் ருக்மிணி கடிதம் மூலம் கண்ணனுக்குத் தெரிவித்ததுமே கண்ணன் ஓடோடியும் வந்து ருக்மிணியைத் தூக்கிச் செல்கிறான். இதற்கு நடுவில் தன்னை எதிர்க்க வந்த ருக்மிணியின் சகோதரன் ஆன ருக்மியையும் மற்ற வீரர்களையும், சொந்தங்களையும் யுத்தம் செய்து வெல்கிறான். இப்படிப் பெண் வீட்டுக்காரர்களோடு போர் புரிந்து ஜெயித்துப் பெண்ணைத் தூக்கிச் சென்று கல்யாணம் செய்து கொள்வது ராக்ஷஸ விவாஹம் ஆகும். இதிலே பெண்ணின் சம்மதம் மிக முக்கியம். பெண் தன்னைத் தூக்கிச் செல்பவனோடு செல்ல முழுச் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும்.

அடுத்துப் பைசாசம். இது மிகவும் அசுரத் தனம். ஆஸுரம் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற மாதிரியானது. ஆஸுரத்திலே பெண்ணின் சம்மதத்தைக் கேட்காவிட்டாலும் பெண் வீட்டுக்காரர்களைப் பணத்தாலே குளிப்பாட்டி சந்தோஷப் படுத்துவான். ஆனால் இதிலே பெண்ணின் சம்மதமும் முக்கியமில்லை. அவளின் உறவினர்களோ, பெற்றோர்களோ எவருமே முக்கியமில்லை. ஆணின் விருப்பம் ஒன்றே குறியாக அனைவரையும் பகைத்துக் கொண்டு பெண்ணையும் பலவந்தப் படுத்தித் திருமணம் செய்து கொள்வது பைசாசம் ஆகும். இதுவும் நிறைய திரைப்படங்களில் பார்த்திருக்கோம். இன்னமும் பார்க்கிறோம்.

இதிலே ராக்ஷஸம், பைசாசம் போன்ற விவாஹ முறைகளைக் காட்டு வாசிகளுக்கும், காந்தர்வ விவாஹ முறையை க்ஷத்திரியர்களுக்கும் அனுமதித்திருந்தார்கள். என்றாலும் இந்து திருமணச் சட்டத்தின்படி எட்டுவிதமான விவாஹங்களிலும் மந்திரபூர்வமாக விவாஹம் நடைபெறவும் உரிமை உண்டு. பொதுவாக பிராம்ம விவாஹம் உயர்ந்தது எனப்பட்டாலும் பல பெண்களுக்கும் பிள்ளை தேடி வந்து கல்யாணம் நடப்பதில்லை. வயது ஆகிவிட்டால் தைவமாகவோ, ஆர்ஷமாகவோ, பிராஜாபத்யமாகவோ திருமணம் செய்து கொடுக்க வேண்டும். இவை நான்குமே பிராமணருக்கு என ஏற்பட்டவை எனினும் மற்றவர்களுக்கும் பெரும்பாலும் இப்படித் தான் இருந்து வருகிறது. ஆனால் பெண்ணே சுயமாகத் தேர்ந்தெடுக்கும் முறை அரசகுலத்தில் உண்டு. அதே போல் காந்தர்வ விவாஹமும் க்ஷத்திரியர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தது.

சரி, இப்போக் கல்யாணங்களின் வகையைத் தெரிந்து கொண்டு விட்டோம். இந்தக் காலத்தில் பெரும்பாலும் தைவமோ, பிராஜாபத்யமாகவோ தான் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆகையால் பெண் பார்த்து நிச்சயம் செய்வதிலிருந்து படிப்படியாக ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

படம் உதவி கூகிளார்: ருக்மிணி, கண்ணன் படம் வெங்கட் நாகராஜ் பதிவிலிருந்து.

சகுந்தலை படம் உதவி கூகிளார்

எட்டு வகைத் திருமணங்கள் பற்றிய குறிப்பு எழுத உதவியது

தெய்வத்தின் குரல்.

PREVIOUS ARTICLE       NEXT ARTICLE


Designed and maintained by AKR Consultants