PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

உனக்கும், எனக்கும் தான் பொருத்தம், அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்!

என்ன ஆச்சரியமா இருக்கா? உண்மையில் அப்படித்தான். பெண்ணுக்கு மணமகனையும், ஆணுக்கு மணமகளையும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். பெண்ணுக்குக் குழந்தை பிறக்குமா என்பதையும் உறுதி செய்து கொள்ளச் சொல்கிறது சாஸ்திரம். இதை ஆயுர்வேதம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்கிறது. பல பெண்களையும் பார்த்திருந்தாலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணுக்குத் தக்க மணமகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்ல அந்தப் பெண்ணிற்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்க வேண்டும். நம் இந்து மதம் என்று இன்றைய நாட்களில் அழைக்கப்படும் சநாதன தர்மத்தின் திருமண முறையில் பிரிவு என்பது அவ்வளவாக இல்லை. தம்பதியர் மன ஒற்றுமையோடு வாழுவதையே வலியுறுத்தும். திருமண மந்திரங்களும் அதற்காகவே ஓதப்படுகின்றன என்பதோடு மன ஒற்றுமையை உறுதியாக்கும் சக்தியும் கொண்டது. இன்றைய அவசர யுகத்தில் செய்யப்படும் சுருக்கமான திருமணங்களைக் குறித்துச் சொல்லவில்லை. ஒரு காலத்தில் முறைப்படி மந்திரங்களைப் பூரணமாக ஓதுவதோடு அதன் அர்த்தங்களையும் பெண்ணும், பிள்ளையும் புரிந்து வைத்துக் கொண்டு கேட்பார்கள். மணமகனும் அதன் பொருளைப் புரிந்து கொண்டே திரும்பச் சொல்வார்.

பையரின், பெண்ணின் நக்ஷத்திரத்திற்குப் பொருத்தம் பார்க்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். ஏனெனில் அதற்கேற்றவாறு தகுதியான முஹூர்த்த நாளைப் பார்க்க வேண்டும். அதே சமயம் இருவரின் ஜாதகத்திலும் பொருத்தம் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தகுதி வாய்ந்த நாளைப் பார்ப்பது வான சாஸ்திரத்தில் அடங்குகிறது. ஆகவே நல்ல வேளையின் நல்ல காலத்தின் ஒத்துழைப்புத் திருமணத்துக்குத் தேவை. அதை மட்டும் இருவரின் நக்ஷத்திரப் பொருத்தத்தின் மூலம் அறிந்தால் போதும். ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாம்; அதற்கு அவ்வளவு முக்கியமில்லை என்கிறது தர்ம சாஸ்திரம். நல்ல காலத்தின் பங்கு பல விஷயங்களிலும் இருக்கும் குறைகளை மூடிக் கொண்டு செல்லும். மணமக்களுக்கும் நல்ல முஹூர்த்த காலத்துக்கும் சுமுகமான தொடர்பு இருக்க வேண்டும். அதை உறுதி செய்ய இருவரின் நக்ஷத்திரங்களும் உதவும். ஆகவே நக்ஷத்திரப் பொருத்தம் இருந்தாலே போதும் என தர்ம சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எனப்படும் பெரிய பெரிய தோஷங்கள் எல்லாம் திருமணத்தில் ஓதப்படும் முக்கியமான மந்திரங்களின் சக்தியால் அகன்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.

இதற்கேற்றாற்போல் நாம் நிறையத் திருமணங்களைப் பார்த்திருப்போம். எங்க வீட்டிலேயே என் பெரிய நாத்தனார் அத்தை பையரையே திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தமே பார்க்கவில்லை. அதே போல் என் மாமனார், மாமியாரும் உறவு என்பதால் பொருத்தமே பார்க்கவில்லை. இதைத் தவிரவும் என் மாமன்மார் இரண்டு பேருக்கு ஜாதகப் பொருத்தமே இல்லை. ஆனால் திருமணம் ஆகிக் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்ந்தனர். பெண்ணுக்கு மூல நக்ஷத்திரம் என்றால் நிர்மூலம் என்றொரு சொலவடை உண்டு. உண்மையில் அது நிர்மலம் என்றே பொருள் கொள்ள வேண்டும். இன்னும் சிலர் ஆணுக்கு மூல நக்ஷத்திரமாக இருந்தாலும் பெண்ணின் அம்மா உயிருடன் இருக்கையில் அவங்களுக்குப் பாதகம் எனச் சொல்கின்றனர். மூல நக்ஷத்திரத்துப் பெண்ணும் சரி, மூல நக்ஷத்திரத்துப் பையரும் சரி, மாமியார், மாமனார் இருக்கும் இடங்களில் திருமணம் நடந்து அந்த மாமியார், மாமனார் 80 வயது வரை இருக்கும் பேறு பெற்றதையும் பார்த்திருப்போம். எங்க வீட்டில் பார்த்திருக்கோம். பூராடம் நூலாடாது என்பார்கள். அப்படிப் பட்ட பூராட நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்கள் சுமங்கலியாக இறந்து போயும் (அதுவும் 75 வயசில்) பார்த்திருக்கிறேன்.

ஜாதகங்களுக்கும், ஜாதகப் பொருத்தத்துக்கும் இன்று நாம் அளிக்கும் முன்னுரிமை அந்தக் காலங்களில் இல்லை. சாஸ்திரங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர். தெய்வத்திடம் பூப் போட்டுப் பார்த்தல், இதிகாசப் புராணப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து அதில் வரும் பக்கங்களுக்கு ஏற்ப முடிவு செய்தல் எனப் பல திருமணங்களும் நடந்திருக்கின்றன. தர்ம சாஸ்திரமே நமக்காக ஏற்பட்டது தான். ஜாதகங்களில் இருக்கும் பலன் சொல்லும் பகுதியை நன்கு செயல்படுத்தினால் குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும். அந்தப் பலன் சொல்லும் பகுதியும் ரிஷிகளீன் உபதேசம் என்று பெரியோர் சொல்கின்றனர். குடும்ப வாழ்க்கையில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் பெறுவதில் ஏற்படும் இடையூறுகளைக் களையவே ஜாதக பலன்கள் உதவி இருக்கின்றன. ஆயுள், ஆரோக்கியம், மகப்பேறு, ஆண் குழந்தைப் பேறு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள உதவுமே அன்றித் திருமண வாழ்க்கைக்கு அல்ல. ஜாதகங்கள் பார்ப்பது என்னும் பழக்கம் இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டி ஆரம்பித்திருக்கலாம். அது இன்றைய நாட்களில் ஒரு கட்டாயமான சடங்காக மாறியுள்ளது. பல நற்பலன்களையும் பல கெடுபலன்களையும் அளிக்கிறது.

கருத்து உதவி: திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் உரை சங்கரா தொலைக்காட்சி, சக்திவிகடன், மற்றும் வீட்டில் பெரியோர்கள் பலரிடம் பேசியதில் கிடைத்த விபரங்கள்.

PREVIOUS ARTICLE       NEXT ARTICLE


Designed and maintained by AKR Consultants