PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

கல்யாணச் சேலை உனதாகும் நாளை!

திருமணத் தேதி குறிக்கப்பட்டுப் பத்திரிகைகள் அடிக்கக் கொடுக்கிறோம். அதிலே குறைந்தது இரண்டு தலைமுறையைக் குறிப்பிட்டால் தான் நாம் அனுப்புபவர்களுக்கு யாரிடமிருந்து பத்திரிகை வந்திருக்கிறது என்பது புரியும். பிள்ளைக்குக் கல்யாணம் எனில் பிள்ளையின் தந்தை, மற்றும் தாத்தா பெயரும் பூர்வீக ஊரும் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். ஒரு சிலர் பிள்ளையின் தாய்வழித் தாத்தா பெயரையும் குறிப்பிடுவார்கள். அதிலும் தவறு இல்லை. ஏனெனில் பிள்ளையின் அம்மா வழி உறவினர்களுக்கு எளிதில் புரியும். அதே போல் பெண்ணுக்கும் தந்தைபெயர் மற்றும் தாத்தாக்கள் இருவரின் பெயர், அவர்களின் பூர்விகம் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். கூடிய வரையில் பத்திரிகை எளிமையாக இருந்தால் நல்லது. சிவப்பு, மஞ்சள் கலந்த வழுவழுப்பான ஆர்ட் பேப்பரில் அச்சிட்டாலே போதுமானது. அதிலேயே ஆங்கிலத்திலும் அச்சிட வசதி இருக்கிறது.

சிலநாட்கள் முன்னர் ஒரு அரங்கேற்றத்துக்குப் பத்திரிகை வந்தது. குறைந்த பக்ஷமாக அந்தப் பத்திரிகையின் விலை ஐநூறு ரூபாயாக இருக்கணும். அவ்வளவு விலை உயர்ந்த பத்திரிகை. இதில் எல்லாம் காசைப் போடுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. பத்திரிகை மங்களகரமாக இருந்தால் போதுமே! அதுக்காகப் பெயர், விலாசம், கல்யாணம் நடக்கும் இடத்துக்கு வரும் வழி போன்றவை கூட அடிக்க முடியாத அளவுக்கு மோசமாவும் இருக்க வேண்டாம். அப்படியே தூக்கிப் போடணும் அவற்றை. :( அதுக்கப்புறமா "உங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்" நபர்களின் பெயர்கள். இது தேவையே இல்லை. பெண் வீட்டுக்கார முக்கியஸ்தர்களும், பிள்ளை வீட்டின் முக்கியஸ்தர்களும் அனைத்து உறவினரின் நல்வரவைக் கட்டாயம் எதிர்ப்பார்க்கத் தான் செய்வார்கள்; செய்கிறார்கள். இதிலே பெயர் போடவில்லை எனில் ஒவ்வொரு குடும்பத்தில் சண்டையே வருகிறது. ஆகவே நல்வரவை எதிர்பார்க்கும், நண்பர்களும் உறவினர்களும் என்று பொதுவாகப் போட்டுடலாம். வம்பே இல்லை. ஒண்ணுமே போடலைனால் இன்னும் நல்லது. அடுத்து மறுபடியும் ஜவுளியைப் பார்க்கலாம். அவ்வளவு சீக்கிரம் இது முடியாது.

பெண்ணிற்குக் கூறைப்புடைவை பொதுவாகப் பிள்ளை வீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு. ஆனால் பெரும்பாலான பிள்ளை வீட்டினர் அதை ஒத்துக் கொள்வதில்லை. முன்பெல்லாம் என்னோட பெரியப்பா பெண்கள் கல்யாணத்தில் எல்லாம் பெண் வீட்டில் மணப்பெண்ணுக்குப் புடைவை எடுப்பது என்பது ஒன்றோ அல்லது இரண்டோ தான் இருக்கும். ஊஞ்சல் புடைவையும், சாந்தி கல்யாணப்புடைவை என்ற முதலிரவுப் புடைவையும் தான் இருக்கும். மற்றப் புடைவைகள் நிச்சியதார்த்தம், கூறைப்புடைவை, நலுங்குப் புடைவை, கிரஹப்ரவேசப் புடைவை போன்ற நான்கு புடைவைகளும் பிள்ளை வீட்டிலேயே எடுப்பார்கள். ஏனெனில் பெண் கல்யாணம் ஆகி அவங்க வீட்டுக்கு வரப் போகிறாள். வீட்டுக்கு அழைக்கும் பெண்ணைப் புதுப்புடைவையோடு மங்கலப் பொருட்களைக் கொடுத்துத் தான் அழைப்பார்கள். அதோடு கூறைப் புடைவை மிகவும் முக்கியம். அதை முஹூர்த்தத்தின் போது பிள்ளைதான் பெண்ணிடம் கொடுத்துக் கட்டிக் கொண்டு வரச் சொல்லுவார். இது குறித்துப் பின்னாலும் வரும். அந்தப் புடைவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்குப் பிள்ளை எடுத்துக் கொடுப்பதாகவே ஐதீகம். ஆகவே தான் பிள்ளை கையால் கொடுக்கச் சொல்லுவார்கள். அப்போது சொல்லப் படும் மந்திரங்களும் இதையே அறிவுறுத்தும். ஆனால் இன்றைய நாட்களில் அதையும் பெண் வீட்டினரே எடுக்கின்றனர்.

அடுத்து விளையாடல் எனப்படும் நலுங்குப்புடைவை. இதை நாத்தனார் தான் செய்ய வேண்டும் என்பார்கள். நலுங்கு என்பது பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் கூச்சம் விலகிப் பழகிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சடங்கு. இதைப் பெண்ணின் நாத்தனார் தான் ஏற்பாடு செய்வதாக ஐதீகம். ஆகவே நலுங்குக்கான சாமான்களும், விளையாட்டுப் பொருட்களும், நலுங்குக்கான புடைவையும் அவள் தான் வாங்குவாள். தன் சகோதரன் அவன் மனைவியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்குத் தான் போடும் இந்த அச்சாரம் நன்மையாக இருத்தல் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவள் தன் சகோதரன் மனைவிக்குப் புடைவை, வளையல், அழகு சாதனப் பொருட்கள், விளையாட்டு சாமான்கள், மங்கலப் பொருட்கள் என வாங்கித் தருவாள். இதன் மூலம் அவளுக்கு சகோதரன் மனைவியிடம் நெருக்கம் அதிகரிக்கும். கல்யாணப் பெண்ணுக்கும் நாத்தனாரிடம் அன்பு ஏற்படும். கல்யாணத்தின் ஒவ்வொரு சடங்கும் இப்படி இரு;குடும்ப உறவுகளையும் ஒன்றுக்கொன்று பிணைப்பதாகவே இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் எல்லாப் புடைவைகளையும் பெண் வீட்டிலேயே எடுக்கின்றனர். இதனால் அவர்களுக்குச் சுமை கூடத்தான் செய்கிறது. ஆனாலும் இப்படித்தான் நடக்கிறது. கூறைப் புடைவையைக் கூடப் பிள்ளை வீட்டினர் ஒத்துக் கொள்வதில்லை. தஞ்சாவூர்ப் பக்கம் கிரஹப்ரவேசப் புடைவையும் கூடப் பெண் வீட்டிலே தான் பெண்ணுக்கு எடுக்க வேண்டும். ஆனால் சாஸ்திரப் படி பிரமசாரியானவன் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்ததுமே தன் திருமணத்திற்கான செலவை தானமாகத் தான் பெற வேண்டும். முன் காலங்களில் அரசர்களிடமோ அல்லது அரசரின் பிரதிநிதிகளிடமோ பெற்று வந்தனர். இதிலிருந்து பிள்ளை வீட்டினருக்கே திருமணச் செலவு என்பது புரிய வரும். இந்தக் காலங்களில் அது இயலாது என்பதால் முடிந்தவரை விவாகச் செலவைப் பிள்ளை வீட்டினரும் பகிர்ந்து கொள்ளலாம்.

இருங்க, இருங்க, இன்னும் துணிமணி எடுத்து முடியலை. பெண்ணுக்கும் பிள்ளைக்கும் எடுப்பதோடு முடியற விஷயமா இந்த ஜவுளி எடுப்பது!!!! அடுத்துப் பரிவார தேவதைகளுக்கு எல்லாம் எடுக்கணுமே! இதான் ரொம்பவே கஷ்டமான விஷயம். பெண் வீட்டில் பெண்ணைத் தவிர பெண்ணின் அம்மா, அத்தை, அப்பாவின் தம்பி அல்லது அண்ணன் மனைவியர், அம்மாவின் கூடப் பிறந்தவர்கள்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கும். அதே போல் பையர் வீட்டிலும் இருக்கும். ஆக இந்த ஜவுளி விஷயத்தில் மட்டும் யாருமே தப்பிக்க முடியாது. முன்னாலெல்லாம் இப்படி இல்லைனு என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். முக்கியமாய்ப் பெண்ணின் அத்தை, பிள்ளையின் அத்தை, பெண்ணின் மாமி, பிள்ளையின் மாமி ஆகியோருக்கு மட்டுமே எடுப்பார்களாம். அதுவும் இரண்டு மூன்று அத்தைமார், மாமிமார் இருந்துவிட்டால் பணமாக ஓதிக் கொடுப்பார்களாம். பெண்ணுக்கு அத்தை அப்பக்கூடை வைப்பது என்றொரு வழக்கம் உண்டு. அது பெண்ணின் அத்தை செய்வதால் அவங்களுக்கு பதில் மரியாதையாகப் பிள்ளை வீட்டார் ஏதோ பணம் கொடுத்து வந்தது போய் இன்றைய தினம் பட்டுப்புடைவையில் வந்து நிற்கிறது. அதே போல் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் அவரவர் மாமா வீட்டு ஆசீர்வாதப் பணம் தான் முதலில் தருவாங்க. அப்போ மாமாக்களுக்கும், பதில் மரியாதை உண்டு. அது இன்று மாமாவுக்கும், மாமிக்கும் துணி எடுப்பதாக ஆகி விட்டிருக்கிறது.

அதைத் தவிரவும் தெரிந்தவர்கள், முக்கிய உறவினர்கள் என ஒரு சூட்கேஸ் நிறைய வேட்டி, புடைவைகளை வாங்கி வைத்துக் கொண்டு விநியோகம் செய்வதும் உண்டு. இது கொடுத்தாலும் கஷ்டம்; கொடுக்கலைனாலும் கஷ்டம். பெரும்பாலும் நாம் கொடுப்பது வாங்கிக்கிறவங்களுக்குப் பிடிக்காது. வேறே வழியே இல்லாமல் வாங்கிப்பாங்க. நமக்கோ பெரிய செலவு செய்துட்டோமேனு இருக்கும். ஆக இப்படி இருபக்கமும் மனம் வருத்தம் அடைவதைத் தவிர்க்கலாம். கட்டாயமாய் மரியாதை செய்ய வேண்டியவங்களுக்குப் பணமாகக் கொடுத்துடலாம். என்ன வேணுமோ அதை வாங்கிப்பாங்க. நமக்கும் கல்யாணச் சத்திரத்துக்கு மூட்டை தூக்கும் சுமை இல்லை. முன்பெல்லாம் இதைக் கல்யாணத்தின் போது முதல்நாள் காலை அல்லது மாலை சாஸ்திரிகளிடம் கொடுத்து ஓதிக் கொடுக்கச் சொல்வார்கள். இப்போதெல்லாம் அவசரம்+நாகரிகம் கலந்து பத்திரிகை கொடுக்கும்போதே பாக்கு, பழம், பூவோடு புடைவை, வேஷ்டியையும் வைத்துக் கொடுத்துவிடுகின்றனர். இப்படி ஒரு வழக்கமே கிடையாது. பத்திரிகை கொடுக்கையில் மஞ்சள் கலந்த அல்லது குங்குமம் கலந்த அக்ஷதை தான் பத்திரிகையின் மேலே வைத்துத் தருவார்கள். இப்போதெல்லாம் அக்ஷதை கொண்டு வருவதே இல்லை.

ராமா கல்யாணமே வைபோகமே! சீதா கல்யாணமே வைபோகமே!       டோலி சஜாகே ரக்னா!


Designed and maintained by AKR Consultants