PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!

ப்யூட்டி பார்லர் விஷயத்தில் பலரும் ஆமோதித்தாலும் பெண்ணும், பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. பதிவில் பகிரவில்லை எனினும் குழுமங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன. கலாசார மாற்றங்கள் தேவையே என்றாலும் ஒட்டுமொத்தமாக நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும் சரியல்ல. இதில் சிலர் இப்போது லிவிங் டுகெதர் வந்திருக்கிறதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். எல்லாம் தொலைக் காட்சி தயவு! ஆனால் சிலர் நான் சொல்வது சரியே என்றும் சொல்கின்றனர். பேச்சு வார்த்தையில் மனவேறுபாடு ஏற்பட்டு ஒரு பெண் தற்கொலையே செய்து கொண்டதாகச் சொல்கிறார் நண்பர் ஒருத்தர். பெண்கள் இத்தனை கோழைகளாகவும் இருக்கக் கூடாது. எதையும் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். கல்யாணம் என்பதை இருவர் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தம் என்ற எண்ணமே இன்றைய இளம் சமுதாயத்திடம் காணப்படுகிறது. மேலும் கற்பனைகளும் பலவாறு உள்ளன. அது எல்லாம் முடிந்து நிகழ்காலத்துக்கு மீண்டு வந்து உண்மையான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கையில் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஆகிறது.

ஆகவே பெண், பிள்ளை இருவருமே தக்க அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. விருப்பு, வெறுப்புக்கள் நிச்சயமாக மாறுபடும். குறைகள் இருபக்கமும் இருக்கும். குறைகளைப் பாராட்டாமல் பொதுவான நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டும். ஒத்துப் போகும் விஷயங்களில் மகிழ்ச்சி அடைய வேண்டும். பொதுவாக மருத்துவர்களில் இருந்து அனுபவம் வாய்ந்த அனைவரும் கூறுவது என்னவெனில் எல்லாவற்றையும் முதலிலேயே பேசி முடித்துவிட்டால் அப்புறம்பேச ஒன்றும் இருக்காது என்பதோடு ஆர்வமும் குறைந்துவிடும் என்பதே. மேலும் பேசிப் பழகிய ஒருவர் சொல்வது என்னவென்றால், என்னதான் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிப் பழகினாலும் வாழ்க்கை என்று வாழப்போனபோது நிறைய வித்தியாசங்கள், மாறுபாடுகள் இருக்கத் தான் செய்தன என்பதே. என்னைப் பொறுத்த வரையில் இது எல்லாம் பெற்றோர் குழந்தைகளுக்குச் சிறு வயசில் இருந்தே கொண்டு வரும் பழக்க வழக்கங்களைப் பொறுத்தே அமைகின்றது. பல பெண்கள் இப்போது திருமணமே வேண்டாம் என்ற முடிவுடன் இருப்பதாகவும் சொல்கின்றனர். இதை எல்லாம் மீறி இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். சரி, இதை இத்தோடு நிறுத்திக் கொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதைப் பார்ப்போம்.

கல்யாணத்துக்கான சாமான்கள் தயார் செய்யணும். இவற்றில் வற்றல், வடாம், அப்பளம் போன்றவையும் அடங்கும். முன்னாட்களில் எல்லாம் இவற்றை வீடுகளில் போட்டுக் கொடுப்பார்கள். நிறையச் செய்ய வேண்டிய காலங்களில் அக்கம்பக்கத்து வீட்டினர் வந்து உதவுவார்கள். உடல் சிரமத்தை ஒரு பொருட்டாக நினைக்காத காலம் அது. அப்பளம் இடுகையில் பாடுவதற்கெனச் சில பாட்டுக்களும் உண்டு. அவற்றில் முக்கியமானது லலிதாம்பாள் சோபனம். சகோதரி சுப்புலக்ஷ்மியால் தொகுக்கப் பட்ட இதைப் பாடிக்கொண்டே அப்பளம், வடாம், வற்றல் போன்றவை செய்வார்களாம். இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு காரியத்தைச் செய்கையில் நல்ல எண்ணங்களே இருக்க வேண்டும் என்பதே. உணவு தயார் செய்பவர்களும் நல்லதையே நினைக்க வேண்டும். அப்பளம், வற்றல்கள், வடாம்கள் எல்லாம் போடுவது கல்யாணச் சீரில் வைக்க மட்டுமின்றி விருந்தினருக்குப் பரிமாறவும் தேவைப் படும் ஒன்றாகவும் இருக்கும்.


இப்போதெல்லாம் சமையல் கான்ட்ராக்டர்களே இந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு விடுகின்றனர். எல்லாருமே சரியாகக் கொடுப்பதாகச் சொல்ல முடியவில்லை. ஆங்காங்கே இவர்களிலும் சிலர் கேட்டால் சரியாகக் கொடுப்பது என வைத்திருக்கின்றனர். சிலர் கேட்டாலும் இவ்வளவு தான் இந்த ரேட்டுக்கு எனச் சொல்வது என வைத்திருக்கின்றனர். மேலும் கல்யாணத்தில் பக்ஷணங்கள் செய்வது என்றொரு வழக்கம் உண்டு. பெண் வீட்டிலேயே செய்யப்படும் இந்த பக்ஷணங்கள் பொதுவாக நல்ல நாள் பார்த்துச் செய்ய ஆரம்பிக்கப் படும். பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துக் கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்து விநியோகம் செய்வார்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளும் உண்டு. கல்யாணப் பத்திரிகை அடித்து வந்ததுமே பிள்ளையாருக்கு முதல் பத்திரிகை வைத்துவிட்டுப் பெண்ணை/பிள்ளையை அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோயிலில் சென்று பத்திரிகைகளை வைத்து வணங்கிப் பின்னர் விநியோகம் ஆரம்பிப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கப்படி செய்யப் படும்.


அதே போல் பக்ஷணங்கள் தயார் செய்யவும் நாள் பார்த்து அன்று மர உரல், அல்லது கல் உரலை அலம்பிச் சந்தனம், குங்குமம் வைத்து, உலக்கைக்கும் சந்தனம், குங்குமம் வைத்து உரலில் முதலில் நல்ல காய்ந்த மஞ்சளைப் போட்டுப் பொடியாக இடிப்பார்கள். இதுக்கு மஞ்சள் இடிக்கிறது என்று சொல்வதுண்டு. ஐந்து, ஏழு, ஒன்பது என எண்ணிக்கையில் அனுபவம் வாய்ந்த சுமங்கலிகளைக் கூப்பிட்டு இடிக்கச் சொல்வார்கள். அதன் பின்னரே பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிப்பார்கள். இப்போதெல்லாம் காடரிங் கான்ட்ராக்டர்களே செய்வதால் அவங்க என்னிக்கு, எப்படிச் செய்யறாங்கனு எல்லாம் சொல்ல முடிவதில்லை. பல கல்யாணங்களையும் ஒத்துக் கொள்வதால் ஒரு தொழிற்சாலை போல் ஒரு பக்கம் முறுக்குகள் சுத்தியவண்ணமாகவும், லட்டுகள் பிடித்த வண்ணமாகவும் இருக்கும் என்கின்றனர். ஒருமுறையாவது நேரில் போய்ப் பார்க்கணும்னு வைச்சிருக்கேன். எப்போ முடியும்னு தெரியலை.

நம்ம வீட்டு பக்ஷணங்கள் தான். எல்லாரும் வந்து எடுத்துக்குங்க.

அழகே உன்னை ஆராதிக்கிறேன்!       பக்ஷணங்கள்


Designed and maintained by AKR Consultants