PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசமும், முறுக்கும். இது அநேகமா எல்லா வகுப்பினரும் செய்கின்றனர். பிராமணர்களுக்கு இதைத் தவிரவும் பருப்புத் தேங்காய் என்பது முக்கியம். வேடிக்கை என்னவெனில் ஒரு பார்சி கல்யாணத்திலும் கூட இம்மாதிரிக் கூம்பு வடிவ இனிப்புகள் (?)காணப்பட்டன. பார்க்க படம்.


இது மாதிரி ஒல்லியான கூம்பாக இல்லாமல் கொஞ்சம் நிதானமாகப் பருப்புத் தேங்காய் செய்வார்கள். அதில் மனோகரம் தான் அநேகமாய் முஹூர்த்தத்தின் போது வைக்கப் படும். இதைத் தவிரவும் மிட்டாய்ப் பருப்புத் தேங்காய் எனக் கலர் கலர் மிட்டாய்களை வைத்து சர்க்கரைப் பாகில் போட்டுப் பிடித்தது, முந்திரிப் பருப்புப் பருப்புத்தேங்காய், மைசூர்ப் பாகுப் பருப்புத் தேங்காய், பர்பி பருப்புத் தேங்காய், வேர்க்கடலைப் பருப்புத் தேங்காய், பொட்டுக்கடலைப்பருப்புத் தேங்காய் எனப் பலவிதங்களில் உண்டு. ஞாயிறன்று கலந்து கொண்ட ஒரு நிச்சயதார்த்தத்தில் உலர் பருப்பு வகைகளில், உலர் பழங்கள் வகைகள் சேர்த்துப் பருப்புத் தேங்காய் வைத்திருந்தார்களாம். முதலில் தெரியவில்லை. தெரிந்திருந்ந்தால் படம் எடுத்து வந்திருப்பேன். வீட்டுக்கு வந்ததும் தான் தெரிய வந்தது. இந்த பக்ஷணங்கள் அனைத்தும் சீர் பக்ஷணங்கள் எனப்படும். முறுக்கு, தேன்குழல், அதிரசம் இது மூன்றும் எல்லாத் தரப்பினருக்கும் முக்கியமானவை.

இதைத் தவீரவும் லட்டுவும், மைசூர்ப்பாகும் கட்டாயம் இருக்கும். இதற்கு மேலும் பக்ஷணங்கள் செய்வதும், வைப்பதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. பொதுவாக மிக்சரும் பல கல்யாணங்களிலும் முன்னால் இடம் பெற்று வந்தது. இப்போதெல்லாம் யாரும் அதைச் சீண்டுவதில்லை. இது காடரிங்காரங்க மூலம் ஒப்பந்த அடிப்படையில் பக்ஷணங்கள் பண்ண ஆரம்பித்ததும் ஏற்பட்ட மாறுதல். முன்னெல்லாம் வீடுகளிலேயே செய்யும் போது முறுக்கு, தேன்குழல், அதிரசம், லட்டு தவிர, மைசூர்ப்பாகும் வீட்டிலேயே செய்து விடுவார்கள். கல்யாணத்திலே பந்திக்குப் போடும் பக்ஷணங்களாக லட்டும், மைசூர்ப்பாகும் இருந்தால் சமையல்காரர்கள் செய்கையில் சீருக்கும் வைக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கேட்டு வாங்குவார்கள். சமையல் நம் பொறுப்பில் சாமான்கள் வாங்கிப் போட்டுச் செய்தால் ஒவ்வொரு வேளைக்கும் போடும் ஸ்வீட்டில் ஒரு பங்கு பிள்ளை வீட்டுக்கும், பெண் வீட்டிற்கும் கொடுப்பது என்பது எழுத்தில் இல்லாத விதிமுறை. ஆக ஸ்வீட் நிறைய இருக்கும். கல்யாணம் முடிந்த அன்று மாலை அநேகமாய் மிக்சரும், கையில் ஒட்டாத சோன்பப்டி, பாதுஷா போன்ற ஸ்வீட்டும் தான் ஒரு காகிதப் பையில் போட்டு மாலை நடக்கும் ஒரே ஒரு மணி நேர ரிசப்ஷனுக்குக் கொடுப்பார்கள். ரிசப்ஷன் பத்தி எல்லாம் இன்னும் விரிவாக எழுதறேன். இப்போதைக்கு பக்ஷணம் சாப்பிடுவோம்.


இப்போதெல்லாம் நிச்சயதார்த்தமே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது. இது அநேகமாய்ப் பிள்ளை வீடுகளிலேயே நடைபெறும். தஞ்சை ஜில்லாவில்(பழைய தஞ்சை ஜில்லா) இதில் அநேகமாய்ப் பெண் வீட்டு ஆண்களும், பிள்ளை வீட்டு ஆண்களுமே கலந்து கொள்வார்கள் என என் மாமியார், மாமனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இதைப் பாக்கு, வெத்திலை மாத்தறதுனு சொல்லுவாங்களாம். பல கல்யாணங்கள் இப்படி வீட்டு வாசல் திண்ணையில் அவரவருக்குள் பேசி முடித்துக் கொண்டு, வெற்றிலை, பாக்கு மாற்றிக் கொண்டு பின்னர் வீட்டு மனிதர்களுக்குச் சொல்லப்பட்டதுண்டு என்கிறார்கள். இது குறித்து எனக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்து என் நாத்தனார் கல்யாணங்கள் என் மாமனார், அவர் வீட்டு ஆண்கள் மட்டுமே போய் நிச்சயம் செய்திருக்கின்றனர். இப்போது போல் எல்லாம் அப்போது விதவிதமான தட்டுக்கள் வைப்பதும் இல்லை. வெறும் பருப்புத் தேங்காயும், மாப்பிள்ளைக்கு ஒரு வேஷ்டி, துண்டும். வேஷ்டி ஜரிகை வேஷ்டியாக இருக்கும். மாப்பிள்ளையோ, பெண்ணோ கலந்து கொள்வதும் இல்லை என்றார்கள். ஆனால் தென் மாவட்டங்களில் மாப்பிள்ளை தன் கல்யாண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வார்.

மாப்பிள்ளையை வைத்துத் தான் தென் மாவட்டங்களில் நிச்சயம் செய்வார்கள். பெண் செல்வதில்லை. வைணவர்களில் பெண் வீட்டிலோ, பிள்ளை வீட்டிலோ அவரவர் வசதிப்படி செய்வதாகக் கூறுகின்றனர். பெண் வீட்டில் நடந்தால் நிச்சயதார்த்தம் என்றும், பிள்ளை வீட்டில் நடந்தால் லக்னப்பத்திரிகை வாசித்தல் என்றும் கூறுகின்றனர். எங்கள் வீட்டில் எல்லாம் லக்னப் பத்திரிகை வாசித்தல் என்பதே தான் சொல்வார்கள். பெண் வீடுகளில் நிச்சயம் நடத்தமாட்டார்கள். மேலும் முன்பெல்லாம் தஞ்சை ஜில்லாவில் கல்யணம் முடியும் வரை கை நனைப்பதில்லை எனச் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் என் மாமியார், மாமனார் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தப்போ அதெல்லாம் பார்க்கவில்லை. நிச்சயதார்த்தம் மட்டும் எளிமையாக என் அப்பா, இன்னும் அவரது நண்பர் ஓரிருவரோடு பாக்கு, வெற்றிலை மாற்றும் சடங்காக நடந்தது. அப்போதெல்லாம் நிச்சயம் முடிந்து ஒரு மாசத்துக்குள்ளாகக் கல்யாணம் நடந்துவிடும். சத்திரம் வாடகைக்கு எடுக்க வேண்டுமே என்ற கவலையோ, பக்ஷணங்கள் செய்தாக வேண்டுமே என்ற கவலையோ இருக்காது. எல்லாத்துக்கும் உதவிக்கு ஆட்கள் ஓடி வருவார்கள்.

ஞாயிறன்று சென்றிருந்த நிச்சயதார்த்தத்தில் பெண்ணுக்குப் பிள்ளை வீட்டாரும், மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டாரும் மோதிரம் போட்டார்கள். முன்பெல்லாம் கல்யாணத்திலே மாப்பிள்ளை வீட்டார் நகை போட்டாலே பெரிய விஷயம். அதோடு மேல்நாட்டு முறையில் கேக் ஒரு முறைக்கு இருமுறை வெட்டிப் பட்டாசு வெடித்து, பலூன்களில் வண்ணக் காகிதச் சிதறல்களை வெடித்துக் கொட்ட வைத்துக் கொண்டாடினார்கள். இது மிகப் புதுமையாக இருந்தது. பல நிச்சயதார்த்தங்கள் சென்றிருந்தாலும் நிச்சயம் முடிந்து பெண்ணும், பிள்ளையும் கேக் வெட்டிப் பார்க்கவில்லை. காமிராவெல்லாம் எடுத்துப் போகவில்லை. அதனால் படங்கள் பகிர முடியவில்லை. சமீபத்தில் ஒரு குழந்தையின் முதலாம் ஆண்டு நிறைவுக்குச் சென்றிருந்தேன். சத்திரத்தில் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். வைதிக முறைப்படியான கொண்டாட்டங்கள் முடிந்து காது குத்தியானதும், மிகப் பெரிய கேக்கில் ஒற்றை மெழுகுவர்த்தி வைத்துக் குழந்தையை ஊதச் சொல்லி, அது கையைச் சுட்டுக்கொள்ளாத குறை :( கேக் வெட்டி வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். கேக் வெட்டினவரைக்கும் சரி, மெழுகுவர்த்தியை மங்களகரமாக ஏற்றிவிட்டுக் கொண்டாடலாமே எனத் தோன்றியது. அணைக்க வேண்டுமா?

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!       ஜோரான சேனி லட்டு, சுவையான சீனி புட்டு, இனி இஷ்டம் போல வெட்டு!


Designed and maintained by AKR Consultants