PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

கொத்தோடு வாழைமரம் கொண்டு வந்து கட்டி, கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி!

ஆச்சு, கல்யாண வேலைகள் ஒவ்வொன்றாகச் செய்து வருகிறோம். துணிமணிகள் வேலை, நகைகள், பாத்திரங்கள் வாங்குவது முடிஞ்சாச்சு. வற்றல், வடகம், அப்பளம் போட்டாச்சு. பக்ஷணங்கள் செய்தாச்சு. இனி திரட்டுப்பால் பாக்கி. அதைக் கடைசியில் தான் செய்யணும். முன்னாடியே செய்ய வேண்டாம். பாலை வேணா வாங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ச்சிக் குறுக்கிச் சேர்த்துக் கொண்டு வருவோம். இப்போ அடுத்த வேலைகள், பந்தக்கால் முஹூர்த்தம், வீடுகளில் செய்ய வேண்டிய சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை வகையறாக்கள். அதுக்கும் முன்னாடி பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை போட்டுடணும். அப்புறமாக் குலதெய்வத்துக்கு ஆராதனைகள் செய்துடணும். துணிமணிகள் வாங்கறச்சேயே வாங்கி வைச்சிருக்கும் பிள்ளையார் வேஷ்டி, குலதெய்வத்திற்கான துணிகள் எல்லாத்தையும் நேரில் சென்று கொடுத்து அபிஷேஹ ஆராதனைகளை முடிச்சுப் பத்திரிகைகளையும் கோயிலில் சாமி காலடியில் வைச்சு வாங்கிட்டு வந்துடணும். முதல் பத்திரிகை எப்போவுமே நம்ம நண்பருக்குத் தான். அதுக்கப்புறமா குலதெய்வங்களுக்குப் பத்திரிகை ஒதுக்கியதும், அவரவர் குடும்ப வழக்கப்படியான ஆசாரியர்களுக்கு அனுப்பி வைக்கணும். இது ரொம்ப முக்கியம். ஏனெனில் அவங்க கிட்டே இருந்து பிரசாதம் வரும். இந்தப் பிரசாதங்களை ஓதி இட்டுக் கொடுத்து ஆசார்ய சம்பாவனையும் முடிஞ்சப்புறமாத் தான் கல்யாணத்திலே மொய்யே கொடுக்க ஆரம்பிக்கணும். அதிலும் முதல் மொய் இரண்டுபேருடைய தாய் மாமன்களுடையதாகவே இருக்கும்.

மாமாவுக்கு எனத் தனியாப் பஞ்சாதியே இருக்கு. அதைச் சொல்லி மாமன் சீரைக் கொடுத்ததும் அத்தை சீர் கொடுக்கணும். இது இரண்டுக்கும் பின்னரே முன்னெல்லாம் வந்திருக்கிறவங்க கொடுப்பாங்க. இப்போல்லாம் தாலி கட்டியானதுமே கல்யாணமே முடிஞ்சுட்டாப்போல் வாழ்த்துகள், கைகுலுக்கல்கள், பரிசுகள் கொடுப்பது என நடக்கிறது. இதை எல்லாம் விரிவாய்ப் பார்ப்போம். இப்போ அடுத்து நாம் செய்ய வேண்டியது பந்தக்கால் முஹூர்த்தம். முஹூர்த்தக்கால் நடுவது என்றும் சொல்லுவார்கள். பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்ற திருமண முஹூர்த்தம் பார்ப்பது போலவே இங்கேயும் பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்றாற்போல் முஹூர்த்தக்கால் நடவும் நாள் பார்ப்பார்கள். அதிகாலையில் சூரிய உதயத்துக்குச் சற்று முன்னர் நடக்கும். அக்கம்பக்கம், சுற்றத்தாரை அழைத்து காவிப் பட்டை, சுண்ணாம்பு அடித்த மூங்கில் காலில் உச்சியில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் வைத்த மஞ்சள் நனைத்த துணியைக் கட்டி மாவிலைக் கொத்து செருகி, ஈசானிய மூலையில் குழி தோண்டுவார்கள்.


அதில் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் சுமங்கலிகளைக் கொண்டு பால் விடச் செய்து தானியங்களைப் போட்டு, காசுகளையும் போடுவார்கள். இதைத் தான் அரசாணிக்கால் நடுவது என்று சொல்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் அது திருமண தினத்தின் போது நடக்கும் எனத் தெரிய வருகிறது. ஆகவே வேறாகவும் இருக்கலாம். பந்தக்கால் முஹூர்த்தத்துக்கும் புரோகிதர் வருவார். முன்பெல்லாம் குடும்ப புரோகிதர்கள் இருந்து வந்ததால் அவர்களே நாளைப் பார்த்துச் சொல்லிச் சரியான நேரத்துக்கு வந்து எல்லாரையும் ஒன்று சேர்த்து நடத்திக் கொடுப்பார். இப்போதெல்லாம் புரோகிதர்களுக்கு மிகவும் கிராக்கியாக ஆகிவிட்டது. இம்மாதிரிச் சின்ன நிகழ்ச்சிகளுக்கெல்லாம் குடும்ப புரோகிதர் வர மாட்டார். தன்னுடைய உதவியாளர்களை அனுப்பி வைத்தால் அதிர்ஷ்டம். இல்லை எனில் நாமே பார்த்துக்கணும். ஒரு சில வீடுகளில் இந்த விஷயம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்கள் தலைமை ஏற்றுக் கொண்டு நடத்திக் கொடுப்பார்கள். பந்தல்காலை அனைவருமாகப் பிடித்துக் கொண்டு குழிக்குள்ளே இறக்குவார்கள். பின்னர் தேங்காய் உடைத்துக் கற்பூர ஆரத்தி எடுக்கப்படும்.


வந்திருக்கும் விருந்தினர்களுக்கு இனிப்பு, இட்லி, வடையாகக் காலை ஆகாரம் கொடுத்து அனுப்புவார்கள். அல்லது வடை, பாயசத்துடன் சாப்பாடு போட்டு அனுப்புவார்கள். இப்போதெல்லாம் சத்திரங்களிலேயே கல்யாணங்கள் நடப்பதால் இதைக் குறித்து யாருக்கும் எதுவும் தெரியறதில்லை. இதுக்கப்புறமா அந்தக் காலை அஸ்திவாரமா வைத்துக் கொண்டு மற்றக் கால்களை நட்டுப் பந்தலைப் போடுவார்கள். பந்தலின் மேற்கூரை விதானத்தில் வெள்ளை சில்க் துணியால் மூடி காகிதப் பூக்களாலும் மற்ற அலங்காரப் பொருட்களாலும் அலங்காரங்கள் செய்வார்கள். பந்தலின் நாற்புறமும் காற்று வர விட்டிருக்கும் இடைவெளிகளில் பனங்குருத்து, தென்னங்குருத்துக்களால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள். வசதி உள்ளவர்கள் சீரியல் வண்ண விளக்குகளாலும் அலங்கரிப்பார்கள். இப்போது கல்யாண மண்டபங்களில் இவை எல்லாம் நிரந்தரமாய்ச் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு கல்யாணத்திலும் இவற்றை நாம் பயன்படுத்துவதற்காகத் தனியாகக் கணிசமானதொரு தொகை மண்டப உரிமையாளர்களால் வசூலிக்கப்படுகிறது. அடுத்து சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை போன்றவற்றைப் பார்த்துட்டு உடனே சத்திரத்துக்குச் செல்லத் தயாராகுங்கள் எல்லோரும்.

ஜோரான சேனி லட்டு, சுவையான சீனி புட்டு, இனி இஷ்டம் போல வெட்டு!       க்ஷேமங்கள் கோரி விநாயகனைத் துதித்து, சங்கரனையும் கெளரியையும் வர்ணித்து!


Designed and maintained by AKR Consultants