PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, அலர்மேல் மங்கை மகிழும் மணாளா!

சுமங்கலிப் பிரார்த்தனையில் புடைவை வைக்கும் கலத்தில் வீட்டில் உள்ள அனைவரின் நகைகளும் போட்டு அலங்கரிப்பதோடு திருமணப் பெண் வீட்டில் என்றால் பெண்ணின் நகைகளும், பிள்ளை வீட்டில் என்றால் கல்யாணப் பெண்ணிற்கு நகை வாங்கி இருந்தால் அதுவும், கூறைப்புடைவையும் வழிபாட்டில் வைக்கப்படும். இது எல்லாருக்கும் வழக்கம் இல்லை. மிகச் சிலர் வீடுகளில் மட்டுமே வழக்கமாக இருக்கிறது. ஆனால் வீட்டினரின் நகைகளைப் போட்டு அலங்கரிப்பது உண்டு. மேலும் தஞ்சை ஜில்லாவில் அத்தைக்குப் புடைவை கொடுத்த பின்னர் அந்தப் புடைவையை அவர் கட்டிக் கொண்டு வந்து அனைவரும் நமஸ்கரித்த பின்னர் புடைவையை அவரிடம் அன்றே கொடுப்பதில்லை. அவர் புடைவையை மாற்றிய பின்னர் சுமங்கலிப் பிரார்த்தனையில் வழிபட்ட புடைவையைக் கொடியில் போடுவார்கள். அன்றிரவு முழுதும் அந்தப் புடைவை கொடியில் இருக்கும். குடும்பத்துச் சுமங்கலிகள் அனைவரும் அன்றிரவு வந்து அந்தப் புடைவையை எடுத்துக் கட்டிக்கொள்வதாக ஐதீகம்.


அடுத்து சமாராதனை. பொதுவாக வெங்கடாசலபதி சமாராதனையே நடைபெறும். என்றாலும் மிகச் சிலர் வீடுகளில் அவரவர் குல தெய்வ ஆராதனையையே சமாராதனையாக நடத்துவார்கள். இது சனிக்கிழமைகளிலேயே நடைபெறும். என்றாலும் பல சமயங்களிலும் கல்யாணம் நடைபெறப் போகும் கிழமையைப் பொறுத்து திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் வைப்பார்கள். சனிக்கிழமை தான் செய்ய வேண்டும் என்பவர்கள் கல்யாணத்திற்குச் சில நாட்கள் முன்னர் வரும் சனிக்கிழமையில் செய்துவிடுவார்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வீட்டுக்கு வீடு சமாராதனை நடைபெறும். சாப்பாடு வருபவர் எல்லாருக்கும் போடுவார்கள். சமாராதனைச் சாப்பாடு என்றே விசேஷமாகச் சொல்லப் படும்.

சாப்பாடு மெனு: சர்க்கரைப் பொங்கல்(இது தான் மிக முக்கியம்) தயிர்ப்பச்சடி, இனிப்புப் பச்சடி, வாழைக்காய்ப் பொடிமாஸ் அல்லது பொடி போட்ட கறி, அவரைக்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்களில் தேங்காய் போட்ட கறி ஒன்று, பருப்பு உசிலி பீன்ஸ் அல்லது கொத்தவரையில். அவியல். அவியல் இல்லை எனில் கத்தரிக்காய்ப் பிட்லை, மோர்க்குழம்பு இருக்கும். ஒரு கலந்த சாதம், சனிக்கிழமை எனில் எள்ளுச் சாதம் தான் இருக்கும். அப்பளம் வீட்டில் செய்தது எனில் சேர்ப்பார்கள். சேனை அல்லது உருளை வறுவல், உளுந்து வடை, ஊறுகாய் அன்று புதிதாய்ப் போட்டது, அவியல் என்றால் சாம்பார். பிட்லை என்றால் மோர்க்குழம்பு எனச் செய்வார்கள். ரசம், மோர். அன்று காலையே வழிபாடு நடைபெறும் இடத்தில் அல்லது பூஜை அறையில் என்றால் அங்கே மாக்கோலம் போட்டு படங்களைத் துடைத்துப்புஷ்பங்கள் சார்த்தி அலங்காரம் செய்வார்கள். பூஜைக்கு வேண்டிய மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி, சந்தனம், உதிரிப் பூக்கள், மாலை, துளசி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் போன்றவை தயார் செய்வார்கள்.

சில வீடுகளில் வெங்கடாசலபதிக்கும் மாவிளக்குப் போடுவதுண்டு. அவர்கள் மாவு இடித்து, வெல்லம், ஏலக்காய் கலந்து தயார் செய்து வைப்பார்கள். சாஸ்திரிகள் தான் வந்து பூஜை செய்யும் வழக்கம் இருந்தது. அதிலும் முன்னெல்லாம் நான்கு அல்லது ஐந்து வைதீகர்கள் வந்து சங்கல்பம் சொல்லி, வீட்டினரின் கோத்திரம், பெயர், நக்ஷத்திரங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு அனைவரின் பெயரையும் சொல்லிச் சங்கல்பம் செய்து வைத்து, சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம் சொல்லிப் பூக்களாலும், துளசியாலும் அர்ச்சனை செய்வார்கள். இப்போது யாரும் வருவதில்லை. வந்தாலும் வீட்டிலேயே சமைத்தாலும் வைதீகர்கள் சாப்பிடுவதில்லை. ஆகவே வீட்டு எஜமானரே சஹஸ்ரநாமம் படித்துப்பூஜை செய்து, அக்கம்பக்கத்து நண்பர்கள், உறவினர்கள் இவர்களில் ஐந்து ஆண்களை அல்லது நான்கு ஆண்களை வைதீகர்களாக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டு முதல் பந்தியில் அமர வைப்பார்கள். இதற்கும் பொண்டுகள் முன்னாடி வைதீகர்களோடு சேர்ந்து சாப்பிட அமர வைப்பது உண்டு. அதற்கு அலர்மேலு மங்காப் பொண்டுகள் என்று பெயர். சுமங்கலியை எண்ணெய்தேய்த்துக் குளிக்கச் செய்து, மடிசார் கட்டும் வழக்கம் இருந்தால் மடிசாருடன் பூஜை செய்து கொண்டிருக்கும் சுவாமி படம் இருக்கும் இடம்/அல்லது பூஜை அறையில் வலப்பக்கமாகக் கோலம் போட்டு இலை போடுவார்கள். அன்று அந்தப் பெண்மணி அலர்மேல் மங்கையாக அவதாரம் எடுத்திருப்பார். வைதீகர்களோடு சேர்ந்து அந்தப் பெண்மணிக்கும் சாப்பாடு போடுவார்கள்.

சாப்பாடு முடிந்து வைதீகர்கள் ஆசீர்வாதம் பண்ணி அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், தக்ஷணை கொடுத்து முடிந்ததுமே மற்றவர்கள் சாப்பிடுவார்கள். கூடவே அலர்மேல் மங்காவுக்கும் அதே போல் வெற்றிலை, பாக்கு, தக்ஷணை உண்டு. இது எல்லாம் முடிஞ்சு அநேகமாய் மறுநாளே சத்திரத்துக்கு அல்லது கல்யாணம் நடக்கும் வீட்டுக்குப்போகிறாப் போல் அமையும். ஆகவே நாமும் அடுத்துப் போகப் போவது கல்யாணச் சத்திரத்துக்கே.

சம்மந்தமும் சம்பர்தாயமும்      நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்


Designed and maintained by AKR Consultants