PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!

பொதுவாகச் சத்திரம்/மண்டபம் பெண் வீட்டுக்கு அருகே தான் பார்ப்பாங்க. பிள்ளை வீட்டுக்காரங்க வெளியூர் எனில் அவர்களே கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் சத்திரம் வந்து சேரும்படியான ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள். இதைச் சிலர் பெண் வீட்டினரின் தலையிலும் கட்டுவதுண்டு. பிள்ளை வீட்டினர் எத்தனை பேரோ அத்தனை பேருக்கும் கல்யாணத்திற்கு வந்து, திரும்பிப் போக ஆகும் செலவைப் பெண் வீட்டினர் ஏற்பது உண்டு. இந்தச் செலவெல்லாம் இப்போது இல்லை என்றாலும் மிக அரிதாகப் பார்க்கவும் முடிகிறது. எங்கள் நண்பர் ஒருத்தரின் பெண்ணிற்கு ஒரு பிள்ளையைப் பார்த்தார்கள். ஜாதகம் பொருந்தி, பிள்ளை, பெண்ணுக்கும் பிடித்துப் போய்விட்டது. பிள்ளை வீட்டார் போட்ட கண்டிஷன் என்னவென்றால் பிள்ளை இப்போது அமெரிக்கா திரும்பிவிடுவான். பின்னால் கல்யாணத்திற்குத் தான் வருவான். ஆகவே இப்போது திரும்பும் செலவு, மீண்டும் கல்யாணத்திற்கு வந்துவிட்டுப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு திரும்பும் செலவு ஆகியவற்றோடு பெண்ணிற்கு விசா எடுக்கும் செலவு எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிஷன். மூன்று பெண்களைப் பெற்ற அந்தத் தந்தை வேறு வழி இல்லாமல் அந்தக் கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டார். பிள்ளைக்கு மூன்று வழி பயணச் செலவு, பெண்ணிற்குப் பிள்ளையோடு செல்லும்போது ஏற்படும் செலவு, விசாச் செலவு, கல்யாணச் செலவு என எக்க்கச்சக்கமாகச் செலவு ஆனது. வேண்டாம்னு வேறே வரன் பார்த்திருக்கலாமேனு கேட்டதுக்கு இப்போவே பெண்ணின் வயது 27 ஆகிவிட்டது. இன்னும் தாமதிக்கக் கூடாதுனு ஒத்துண்டோம்னு சொன்னார். இது சில வருடங்கள் முன்னர் நடந்தது.

பெண் வீட்டினர் செல்வதற்கு முன்னர் சமையல்காரர்கள் அங்கே சென்றுவிடுவார்கள். பெண் வீட்டில் இருந்து விஷயம் தெரிந்த யாரேனும் அங்கே சென்று சமையல்காரர்களுக்கு மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். சமையல்காரர்களும் அவர்கள் எந்த அளவிற்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்று சொல்லுவார்கள். காடரிங் கல்யாணம் இல்லை எனில் சாமான்கள், காய்கறிகள், பழங்கள், மற்றப் பொருட்கள் வாங்கிச் சேமித்து வைத்திருக்கும் அறையை முக்கியமான நம்பகமான ஆள் ஒருத்தரை முன்னாலேயே போய் சாமான்களை எல்லாம் லிஸ்ட் படி வாங்கிச் சரிபார்த்து வைக்கச் சொல்லி அனுப்பி வைப்பார்கள். அந்த அறையின் சாவி அவரையும் இன்னொரு நம்பகமானவரையும் தவிர மறந்தும் கல்யாணப்பெண்ணின் தாய், தந்தையிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. அவர்கள் இருக்கும் வேலை முசுவில் சாவியை எங்காவது வைத்துவிட்டுத் தேடுவார்கள். ஒரு கல்யாணத்தில் சாவி கிடைக்காமல் உடைக்க வேண்டி ஆச்சு.

கல்யாணத்திற்கு முதல்நாள் காலையில் தான் சத்திரம்/மண்டபம் செல்ல நல்ல நேரம் பார்த்திருப்பார்கள். சத்திரம் செல்லும் முன்னர் இரு வீட்டினரும் அரிசியை ஊற வைத்து அரைத்து மாக்கோலம் போட்டு வைப்பார்கள். பிள்ளை வீட்டினர் உள்ளூராக இருந்தால் அவர்கள் சத்திரம் வரும் முன்னர் பெண் வீட்டினர் அங்கே சென்றுவிட வேண்டும். பிள்ளை வீட்டினர் வெளியூராக இருந்தால் அதிகாலையில் வருகிறாப்போல் ஏற்பாடுகள் பண்ணி இருப்பாங்க. ஆகவே பெண் வீட்டினர் முதல்நாள் இரவே போய்விடலாம். எங்க பொண்ணுக்கு வெள்ளிக்கிழமை கல்யாணம். வியாழக்கிழமை அதிகாலை 5-15 மணிக்கு நல்ல நேரம் பார்த்திருந்தோம். பிள்ளை வீட்டினர் மும்பையாக இருந்தாலும் இரண்டு நாட்கள் முன்னரே வந்து மாம்பலத்தில் தங்கி இருந்தனர். அவர்களை ஏழரைக்கு எமகண்டத்துக்குப் பின்னர் போய் அழைத்து வந்தோம். எங்க பையருக்கு ஞாயிறன்று கல்யாணம். ஆனால் அந்த வருடம் எக்கச்சக்கமாக அடித்த புயலினாலும், மறுநாள் சனிக்கிழமை அன்று புதியதொரு புயல் நாமகரணம் செய்யப்பட்டிருந்ததாலும் வெள்ளி இரவே வந்திருந்த உறவினரோடு சத்திரத்துக்குப் போய்விட்டோம். பெண் வீட்டினரிடமும் தெரிவித்துவிட்டோம். அவர்களும் ஒத்துக்கொண்டனர். மறுநாள் தான் தெரிந்தது அது எத்தனை நல்லது என்று. மறுநாள் ஏதோ திடீர் பந்த் நடக்க கல்யாணத்துக்கு வரவேண்டிய மற்ற உறவினர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அதோடு மழை வேறு.

பொதுவாகக் கல்யாணம் உத்தராயணத்திலேயே வைப்பார்கள். தை மாதத்தில் ஆரம்பித்து, ஆனி மாதத்தோடு கல்யாணங்கள் முடிந்துவிடும். பின்னர் ஆவணி பரவாயில்லை என ஆரம்பித்து இப்போதுக் கடந்த பத்து வருடங்களாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் திருமணங்கள் நடக்கின்றன. இந்த மாதத் திருமணங்களின் நாயகன், நாயகியர் பெரும்பாலும் வெளிநாட்டு வாசிகளாகவே இருப்பார்கள். என்றாலும் இப்போது உள்நாட்டினரும் செய்கின்றனர். வட மாநிலங்களிலும் இந்தக்கலாசாரம் பரவி உள்ளது. ஆச்சு, நம்ம விஷயத்துக்கு வருவோம். சத்திரத்துக்குப் போய்ச் சேருவோம், பெண் வீட்டினரோ, பிள்ளை வீட்டினரோ சத்திரம் கிளம்பும் முன்னர் யாத்ரா தானம் என்ற ஒன்றைப் பண்ண வேண்டும். பொதுவாகக் கல்யாணப் பிள்ளை மட்டுமே செய்யும் இது இரு வீட்டினரும் செய்யலாம். பெண்ணின் சார்பில் பெண்ணின் தந்தை செய்யலாம். கல்யாணம் பண்ணி வைக்கக் கூடவே வரும் சாஸ்திரிகளே இதைப் பண்ணி வைப்பார். சாஸ்திரிகள் இப்போதெல்லாம் கூட வருவது என்பது பிள்ளை வீட்டினர் வெளியூரிலிருந்து வந்தால் மட்டுமே கூடவே அழைத்துவருவதோடு இருக்கிறது. உள்ளூராக இருந்தால் அவர்கள் ஒவ்வொரு சடங்குக்கும் அந்த நேரத்துக்குத் தான் வருகின்றனர்.


யாத்ராதானம் உள்ளூராகவே இருந்தாலும் சுப காரியங்கள் தொடங்கும் முன்னர் வேதம் படித்தவர்களுக்கு தானங்கள் செய்துவிட்டு ஆரம்பிப்பது மிக நல்லது. பெண் வீட்டுக்காரங்க முன்னால் போய் வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன். இது பெண் வீட்டுக்காரங்க எடுத்து நடத்தும் கல்யாணங்களில் பொதுவாகக் காணப்படுவது. சில சமூகங்களில் பிள்ளை வீட்டினர் கல்யாணச் செலவை ஏற்பார்கள். அப்போது பெண் மேள, தாளத்தோடு, சீர் வரிசைகளை உறவினர்கள் ஏந்திவரக் குதிரைகள் பூட்டிய சாரட்டிலோ, காரிலோ அழைத்து வரப்படுவாள். அதற்கு முன்னர் பெண்ணிற்குப் பெண் வீட்டிலும், பிள்ளைக்குப் பிள்ளை வீட்டிலும் முக்கிய உறவின்முறையினர் அலங்கரித்து அமர வைத்து நலுங்கு வைப்பார்கள். பின்னர் பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினரில் மூன்று சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். ஆரத்திக்குப் பணம் போடுவது உண்டு. பணம் இத்தனை வேண்டும் என ஆரத்தி எடுக்கும் முக்கிய உறவின் முறைப் பெண்கள் கேட்டு வாங்கிக் கொள்வதும் உண்டு. ஆயிற்று. இப்போது நம்ம கல்யாணத்தில் பெண் வீட்டினர் முன்னாடி வந்தாச்சு. எல்லாரும் சாமானைத் தூக்கிண்டு உள்ளே போகிறாப்போல் கல்யாணப் பெண் போக முடியாது. அவளை ஆரத்தி எடுத்து சுற்றிக் கொட்டி வலக்காலை முன் வைத்து வரச் சொல்லுவார்கள். இப்போதெல்லாம் இந்த ஆரத்தி வேலையையும் காடரிங்காரர்கள் பொறுப்பில் இருந்தாலும் ஆரத்தி எடுக்கப் பெண்ணின் அத்தை, மாமி, பாட்டி சுமங்கலியாக இருந்தால் பாட்டி என அழைக்கப்படுவார்கள். இது எல்லாம் கல்யாணத்திற்கு முதல்நாள் ஆரத்திக்கு. மறு நாள் ஆரத்திக்கு பிள்ளை வீட்டினர் ஒருத்தர், பெண் வீட்டினர் ஒருத்தர் என எடுக்க வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம்.

அடுத்து மாப்பிள்ளை வரப் போகிறார் தயாராக இருக்கவும். மாப்பிள்ளை வந்ததும் விரதம் ஆரம்பிக்கும். நாந்தியெல்லாம் உண்டு. ஆகவே ரொம்பப் பசிச்சால் டிபன் சாப்பிட்டுடுங்க. பெண், பெண்ணின் அப்பா, அம்மா, அவங்க கோத்திர தாயாதிகள், பையர், பையரின் அப்பா, அம்மா, கோத்திர தாயாதிகள் சாப்பிட முடியாது. எல்லாம் முடிஞ்சதும் மத்தியானமாத் தான் சாப்பாடு! :))))மத்தவங்க டிபன் சாப்பிட்டுக்கலாம்.

படத்துக்கு நன்றி: ஹுசைனம்மா! :)))))

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்       கல்யாணப்பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்


Designed and maintained by AKR Consultants