PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

கல்யாணப்பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் அம்மோய், பூவோடு வருமே, பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்!

இதை முன்னரே குறிப்பிட்டிருக்கணும், எப்படியோ மறந்திருக்கேன். கல்யாணப் பெண்ணிற்கு எத்தனை நகைகள் வாங்கிப் பூட்டினாலும், கைகளில் கூடவே கண்ணாடி வளையல்களும் அணிவிப்பார்கள். இதை ஒரு சடங்காகவே சிலர் செய்வார்கள். வைணவர்களில் ஒரு சாரார் கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்னர் ஒரு நல்ல நாள் பார்த்து அக்கம்பக்கம் சுமங்கலிகளை அழைத்துப் பெண்ணைப் புத்தாடை அணிந்து அமர வைத்து, சந்தனம், குங்குமம் பூசி வளையல்களை அணிவிக்கச் செய்வார்கள். பெண்ணின் தோழிகளும் இதில் பங்கு பெறுவர். சுமங்கலிகளுக்கும், பெண்ணின் தோழிகளுக்கும் வெற்றிலை, பாக்கு, இனிப்புக் கொடுப்பது உண்டு. மற்ற பிராமணரில் குறிப்பிட்ட சில ஊர்களில் இதைத் தோழிப்பொங்கல் எனச் செய்வார்கள். அன்று தான் கல்யாணப் பெண்ணிற்கு மாமன் சீரும் கொடுப்பார்கள். பெண்ணை அவள் தோழிகளோடு நல்ல நாள் பார்த்து மாமன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விதவிதமான உணவுகள் செய்து, பெண்ணிற்குப்புத்தாடை மற்றும் மாமனால் இயன்ற பல சீர்களையும் கொடுத்து முதல் மாலையை மாமன் கைகளால் போடச் செய்துப் பெண் வீட்டில் கொண்டு விடுவார்கள்.

வசதி படைத்தவர்கள் மேள, தாளத்தோடு செய்வார்கள். இதெல்லாம் இப்போது இல்லை. முன்பெல்லாம் சின்ன கிராமங்கள் அல்லது சின்ன ஊர்களில் நடந்து வந்ததால் அன்று காலையே பெண்ணை நதிக்கரைக்கு அல்லது குளக்கரைக்கு அழைத்துச் சென்று ஸ்நானம் செய்யச் சொல்லிப் புத்தாடை அணிவித்து ஊர்வலமாகத் தோழிகள் சூழ அழைத்து வருவார்கள். அப்போது வீட்டுக்கு வீடு பெண்ணிற்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பது உண்டு. மேலும் அப்போதெல்லாம் பெண்கள் மிகச் சிறு வயது. இப்போதெல்லாம் குறைந்த பக்ஷம் 25 என்றிருந்தது இப்போது 27, 30 என ஆகிவிட்டதால் வளர்ந்த விபரம் தெரிந்த பெண்களுக்கு இதற்கெல்லாம் இயல்பான கூச்சம் வந்துவிடுகிறது. எனவே காலப்போக்கில் இவை சுத்தமாய் மறைந்தொழிந்து போய் விட்டது.. இதைக் கல்யாணத்திற்கு நாலைந்து நாட்கள் முன்னரே செய்வார்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் சில குடும்பங்களில் பெண்ணின் அத்தை இம்மாதிரி கல்யாணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து விருந்து படைத்து உபசரிக்கும் வழக்கம் இருக்கிறது. அம்பத்தூரில் இருக்கையில் எதிர்வீட்டில் நடந்து பார்த்திருக்கேன். இதன் பின்னரே பெண் சத்திரம்/மண்டபம் அல்லது கல்யாணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவாள்.

கல்யாண அமர்க்களத்தில் சீப்பை மறந்த கதையாகத் திரட்டுப்பால் காய்ச்ச மறந்துட்டோம். ஆனால் பெண்ணின் மாமி மறக்காமல் காய்ச்சி எடுத்துட்டு வந்துட்டாங்க. . திரட்டுப் பால் காய்ச்சும்போது பொங்கி வழியாமல் இருக்க அதனுள் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டுக் காய்ச்சினால் பொங்கி வழியாது. பால் நன்கு திரண்டு வந்த பிறகே சர்க்கரை சேர்க்கணும். திருநெல்வேலிப் பக்கம் தேங்காய்த் திரட்டுப் பால் மிகவும் பிரபலம். அவங்க இரண்டு வகையும் செய்வாங்க. நம்ம கல்யாணத்திலும் ரெண்டு வகையும் வைச்சுப்போமே! :))))

பெண் வீட்டினர் போய்ச் சேர்ந்ததுமே சீர் வகைகளை அலங்கரித்து வைக்க வேண்டும். முன்னெல்லாம் அப்படியே பெட்டியோடு, பக்ஷணங்கள் கூடைகளில் வைக்கப்பட்டு கூடையோடு கொடுப்பார்கள். யாரும் அதிகமாய் அலட்டிக் கொண்டதில்லை. பெரும்பாலும் வெயில் காலத்திலேயே கல்யாணம் நடக்கும் என்பதால் பக்ஷணங்கள் நமுத்தும் போகாது. ஆனால் இப்போதெல்லாம் காடரிங்காரர்கள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட பெட்டிகளில் கொடுத்துவிடுகிறார்கள் என்பதோடு ஒவ்வொன்றையும் தனித்தனி பாக்கிங்காகவும் வைக்கின்றனர். ஆகவே விநியோகம் செய்ய வசதி. பிள்ளை வீட்டினர் தங்கும் இடத்தில் அவர்களுக்கு ஏற்ற வசதிகள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். முன்னெல்லாம் பல்பொடி, சோப்பு, தேங்காய் எண்ணெய், பவுடர் டப்பா, குங்குமம், சாந்து, சீப்பு போன்ற பொருட்கள் அங்கே அவர்கள் வரும் முன்னர் வைக்க வேண்டும். அதோடு பெண்ணிற்குக் கொடுக்க வேண்டிய பாத்திரங்கள், டப்பாக்கள், சம்புடங்கள் ஆகியவற்றில் மளிகை சாமான்களை நிரப்பி அங்கே அடுக்கி வைப்பார்கள். இதற்கு அங்கமணிச் சீர் என்று பெயர். அரிசி, பருப்பில் இருந்து ஆரம்பித்து சர்க்கரை, காப்பிப் பொடி, தேயிலைப்பொடி, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, கிராம்பு வரை எல்லாமும் இருக்கும். இதோடு சேர்த்து ஏற்கெனவே செய்த அப்பளம், வடாம், வற்றல் போன்றவற்றையும் வைப்பார்கள். பக்ஷணங்களும் இடம் பெறும்.


பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எவர்சில்வர் புழக்கத்திற்கு வந்த பின்னர் அவை அதிகமாகக் காணப்படுகின்றன. அதற்கு முன்னர் பித்தளை, செம்பு, வெண்கலம், வெள்ளி, ஈயத்தில் ரசச் சொம்பு போன்றவையே. இந்த ஈயச் சொம்பில் தான் தீபாவளி மருந்தும் கிளறி வைத்திருப்பார்கள். வகை வகையாகக் கல்யாணச் சாப்பாடு சாப்பிடுவதால் ஜீரணத்துக்குனு நினைக்கிறேன். எல்லா ஏற்பாடுகளும் பிள்ளை வீட்டினர் வரும் முன்னரே செய்திருக்க வேண்டும். பிள்ளை வீட்டினர் வராங்களா, தகவல் கிடைத்ததும், ஆரத்தியை எடுத்துக் கொண்டு வாசலில் தயாராக நிற்க வேண்டும். காடரிங்காரர்கள் எனில் அவர்கள் காடரிங்கில் ஃபோட்டோவும் அடக்கம். இல்லை எனில் பெண் வீட்டினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆச்சு, அதோ வந்தாச்சு பிள்ளை வீட்டினர். பெண்ணின் அம்மா, அப்பா, மற்றும் சித்தப்பா, சித்தி முறை உறவுகள், பெண்ணின் பாட்டி, பெண்ணின் மாமா, மாமி, அத்தை, அத்தை கணவர் போன்ற முக்கிய உறவினர் முன்னே நின்று வரவேற்பார்கள். முன்னெல்லாம் ஆரத்தி சுற்றி பெண்வீட்டு முக்கியஸ்தரான மாமாவோ தாத்தாவோ மாலை போட்டுக் கைலாகு கொடுத்து மாப்பிள்ளையை அழைப்பார்கள். இப்போது காடரிங் காரர்கள் பிள்ளையின் அம்மா, அப்பா, பிள்ளை, பிள்ளையின் சகோதரி, சகோதரி கணவர் ஆகியோருக்கு ஸ்பெஷல் மாலை போட்டு, பிள்ளை, பிள்ளையின் அம்மா, அப்பா, சகோதரி ஆகியோரைத் தனியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து, மேலிருந்து பலூன்கள் தானாக/அல்லது வெடிக்க வைத்துப் பூக்கள் கொட்டுவது போல் ஏற்பாடு செய்து வரவேற்கின்றனர். அன்று பிள்ளை வீட்டினரோடு வரும் அனைவருக்கும் சிறு குழந்தை உட்பட அனைவர் கழுத்திலும் ஒரு சின்ன மாலையைப் போட்டுடறாங்க. சம்பங்கிப் பூக்கள்னு நினைக்கிறேன். வாசனையிலிருந்து அப்படித் தான் தெரிஞ்சது. :)))) நல்லவேளையாப் பெண்ணின் மாமி காய்ச்சிக் கொண்டு வந்த திரட்டுப்பாலை ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் போட்டு வைத்திருந்து பின்னர் பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மா கையில் திரட்டுப் பால் அடங்கிய பாத்திரத்தைக் கொடுப்பாங்க.

பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!      நாளாம், நாளாம், திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும் மண நாளாம்!!


Designed and maintained by AKR Consultants