PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

நாளாம், நாளாம், திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும் மண நாளாம்!


கல்யாண மேடை. இது விரதம் செய்வதற்கு முன்னர் எடுத்த படம். :)))) போட்டோவில் இருப்பது என் அப்பா, அம்மா, இடப்பக்கம் எங்கள் தாத்தா(அப்பாவின் அப்பா) வலப்பக்கம் அவங்க குலதெய்வம் மூங்கிலணை காமாட்சி அம்மன், நடுவே சாய்பாபா.

இந்தத் திரட்டுப்பால் பெண்ணின் அம்மாவால் கொடுக்கப்படுவது தென் மாவட்டங்களில் கிடையாது. இப்போதும் இருக்கிறதாகத் தெரியவில்லை. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் இது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இது கொடுக்கவில்லை எனில் கோபம் கொள்ளும் சம்பந்தி வீட்டாரை முன்பெல்லாம் காணமுடியும். சண்டையே வரும். இப்போது சென்னையில் பலதரப்பட்டவர்களும் வசிப்பதில் காடரிங்காரர்களால் இது எல்லா மாவட்டக்காரர்களாலும் பின்பற்றப் படுவதைக் காண முடியும். பொதுவாகச் சீர் வரிசையில் சமையலுக்குத் தேவைப்படும் பாத்திரங்கள் தவிர, வெண்கலம், பித்தளைப்பாத்திரங்களில் தாம்பாளம், குத்துவிளக்கு, குடம், சொம்புகள், அரிக்கும் சட்டி, பொட்டுப் போட்ட மைசூர் வாணாய் எனப்படும் பாத்திரம், அடுக்கு வகைகள், பித்தளை ட்ரம், வாளி, வெண்கலப்பானைகள், அளக்கும் படி போன்றவை அவரவர் வசதிக்கு ஏற்பக் கொடுக்கப்படும். படியை முக்கியமாய்க் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் எவர்சில்வரிலேயே படி வந்து விட்டதால் அநேகமாய் அதில் வாங்குவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர். படி முக்கிய விசேஷங்களுக்குத் தேவைப்படும். நிறைநாழி வைக்க, ஏற்றி இறக்க எனப் பலவிதங்களிலும் பயன்படும் என்பதால் படி எல்லா அளவுகளிலும் வாங்கி இருப்பார்கள். வெள்ளிப் பாத்திரங்களில் பஞ்சாத்திரம், உத்தரணி, சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ், சின்னத் தட்டு, பன்னீர்ச்செம்பு(தேவையானால்)விளக்கு, கூஜா அல்லது சொம்பு(வரலக்ஷ்மி விரதத்திற்குக்கலசம் வைக்க) பெரிய சாப்பிடும் தட்டு, பால் இடும் கிண்ணம் போன்றவை முக்கியமாக அடங்கும். மற்றவை அவரவர் விருப்பமும், வசதிக்கும் ஏற்பக் கொடுப்பார்கள். மிக மிக வசதி உள்ளவர்கள் வெள்ளிக் குடம், வெள்ளித் தேங்காய் போன்றவை கொடுக்கின்றனர். இதெல்லாம் கொஞ்சம் ஆடம்பரமாகத் தோன்றும். வெள்ளி கொடுக்க இயலாதவர்களும் உண்டு.

மாப்பிள்ளையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றதும் அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்து உபசாரங்கள் செய்து பின்னர் விரதம் ஆரம்பிக்க அவர்களின் செளகரியத்தைக் கேட்க வேண்டும். சிலர் வீட்டிலேயே (உள்ளூராக இருந்தால்) குளித்துவிட்டு வந்திருப்பார்கள். இல்லை எனில் அவர்கள் குளித்து முடித்துத் தயாராக வந்ததும் விரதம் ஆரம்பிக்க வேண்டும். முதலில் மணமகன் செய்யப் போகும் விரதத்தைப்பார்க்கப் போகிறோம். இதை அஷ்ட விரதம் என்றும் பூர்வாங்கம் என்றும் கூடக் கூறுகின்றனர். பிள்ளையின் வித்யா காலம் முடிந்துவிட்டது என்றாலே பிரமசரியம் முடிந்து கிரஹஸ்தாசிரமத்திற்குத் தயாராகிவிட்டான் என்றே பொருள். ஆனால் இந்தக்காலங்களில் குருகுல வாசம் என்பதெல்லாம் இல்லை என்பதோடு அவரவர் பொருளாதார அடிப்படையிலும் திருமணங்கள் தாமதம் ஆகின்றன. எனினும் இந்த விரதம் செய்வதை விடாமல் கடைப்பிடிக்கின்றனர். இது அவரவர் சார்ந்துள்ள வேத சாகையைப் பொறுத்து வேத அத்யயனம் செய்வதையே சுருக்கமாக அஷ்ட விரதம் என்று அழைக்கின்றனர். இந்த சம்பிரதாயம் ஒவ்வொரு வேதக்காரர்களுக்கும் அவரவர் வேதத்தை ஒட்டி மாறுபடும்.

ரிக் வேதக்காரர்களுக்கு முதலில் ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷத் என அத்யயனம் செய்துவிட்டுப் பின்னர் ஸம்ஹிதா பாகத்திற்கு பத பாடம், கிரம பாடம், ஜடா பாடம் முடித்து மலா-சிகா-ரேகா-த்வஜம்-தண்டகம்-ரதம்-கனம் என்னும் விக்ருதி பாடங்களை அத்யயனம் செய்வார்கள். பாஷ்யங்களும் படிக்கப்படும், யக்ஞம் முதலியவற்றை உலக நன்மைக்காகவும் தானும் நலமாக வாழவும் வேண்டிக் கொண்டு வழி செய்து கொள்வான் பிரமசாரி.

யஜுர் வேதத்தில் ப்ராபாத்ய, செளம்ய, ஆக்னேய, வைஸ்வேதேவ என்ற நான்கு, பின்னர் பூர்வம், உத்தரம் என இரு பிரிவுகள் ஆக மொத்தம் எட்டுப்பகுதிகளின் சாகைகள் அத்யயனம் செய்யப்பட்டு பதம், கிரமம், ஜடா பாடம், கனபாடம், வர்ண கிரமம் என்பது செய்யப்படும்.

ஸாமவேதத்தில் த்ராஹ்யான சூத்ரங்களைப் (எங்க புக்ககத்தின் சூத்ரம் இதுவே) பின்பற்றுபவர்களுக்கும் எட்டுப் பிரிவுகள் உண்டு. அவை உபநயனம், கோதானம், வ்ராதிகம், ஆதித்யம், மஹாநாம்நிகம், உபநிஷத், பெளதிகம், பிரமசாமம் ஆகியன. ப்ரக்ருதி, ஊஹம், ரஹஸ்யம், ஆரணம், பூரவார்ச்சிகம், உத்ரார்ச்சிகம், பதம், லக்ஷணம் முதலிய எட்டு பிராமணங்களின் கிரந்தங்களும் அத்யயனம் செய்யப்படும். இதை இங்கே இவ்வளவு விளக்கமாய்ச் சொல்வதின் காரணம், எழுதி வைத்துக் கொண்டால் அவரவர் வீட்டுத் திருமணத்தின் போது சாஸ்திரிகளிடம் கேட்டு நிச்சயம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பகுதியும் ரிஷி தர்ப்பணம், ஹோமம் போன்றவற்றோடு தொடங்கி வேதத்தின் அந்தக் குறிப்பிட்ட பகுதி தொடர்பான சில கர்மாக்களையும் செய்து உத்ஸர்ஜனம் செய்வார்கள். இப்படி வேதத்தின் எல்லாப் பகுதிகளையும் கற்பதே அஷ்ட விரதம் எனப்படும். வேத அத்யயனம் முறையாகக் கற்றிருந்தால் இந்த அஷ்ட விரதம் எனப்படுவது தேவையில்லை என்பது ஒரு சாரார் சொல்கிறார்கள். ஆனாலும் அத்யயனம் செய்தவர்களும் இதைச் செய்கின்றனர்.

இப்போது வேதம் கற்றவர்கள் மிகச் சிலரே இருப்பதால் அனைவருக்கும் இது அவசியம் என்பது தெரிய வருகிறது. இதன் கடைசியில் வருவதே ஸமாவர்த்தனம். ஸமாவர்த்தனம் என்றால் முடிவு, முடிப்பது எனப் பொருள். இது குருகுலத்தில் இருந்து பிரமசாரி வீடு திரும்பும் கால கட்டத்தைக் குறிக்கும். இந்த அஷ்ட விரதத்தைக் கல்யாணத்திற்கு முதல்நாள் தான் செய்வது என்பது இப்போது ஏற்பட்ட சம்பிரதாயம் ஆகும். இதை எப்போது வேண்டுமானாலும் குருகுல வாசம் முடியும் சமயம், விவாஹம் செய்து கொள்வதற்கு நான்கைந்து மாதங்கள் முன்னர் என்று செய்யலாம். ஆனால் இப்போதெல்லாம் இளைஞர்களுக்கு நாற்காலி உத்தியோகம் என்பதால் அவர்கள் கல்யாணத்திற்கு லீவு எடுப்பதால் முதல்நாள் கட்டாயம் அஷ்ட விரதம் செய்யணும் என வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் இப்போதெல்லாம் மணமகனை காயத்ரி மந்திரம் சொல்லச் சொல்லிவிட்டு புரோகிதர்களே இதைச் சொல்லி முடித்துவிடுகின்றனர். இதை முடித்ததும் மணமகன் மந்திரோக்தமாக ஸ்நானம் செய்யணும். ஆனால் அதெல்லாம் இப்போச் செய்யறதில்லை. இந்நிலையில் இருக்கும் பிரமசாரியை ஸ்நாதகன் என அழைக்கின்றன்னர்ர். பிரமசரியத்தைக் கடந்தாலும் இன்னும் கிரஹஸ்தாசிரமத்தில் நுழையவில்லை. இப்போது அவன் அநாஸ்ரமியாக இருக்கிறான். ஆகவே உடனடியாகத் திருமணம் செய்து வைக்கணும் என ஏற்பாடுகள் நடக்கும்.

விரத விபரங்கள் தொடரும்! வேதங்கள் பற்றிய குறிப்புகளுக்கு நன்றி: காமகோடி தளம், தெய்வத்தின் குரல், ரா.கணபதி.

கல்யாணப்பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்       மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக, மாப்பிள்ளை ஆக!


Designed and maintained by AKR Consultants