PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!(கல்யாணப் பதிவுகள்)

இது சத்திரத்தில் வாசிக்கையில் எடுத்த படம். அட்ஜஸ்ட் செய்துக்குங்க. :)))))

நாதஸ்வரக் காரர்கள் நன்கு அனுபவித்துப் பாடிக் கொண்டு வந்தனர். கூடவே ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்தது. இதைத் தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஜானவாசம் என்று சொல்வார்கள். வட மாநிலங்களிலோ பிள்ளை வீட்டில் இருந்து மணமகள் வீட்டுக்கு வருவதே இம்மாதிரியான அலங்கரித்த வண்டிகளில் தான். இதை "பராத்" என்று சொல்வார்கள். இந்த பராத்தோடு வரும் பிள்ளை வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பெண் வீட்டினர் தகுந்த சன்மானங்கள் செய்வது வழக்கம். எத்தனை நபர்கள் வருகின்றனரோ அத்தனை நபர்களுக்கும் பரிசுகள் கொடுத்தே ஆகவேண்டும். அது புடைவை போன்ற துணிகளாகவோ, வெள்ளிக்காசு, தங்கக்காசு போன்றவையாகவோ இருக்கும். ஆச்சு, நம்ம ஊர்வலம் சத்திரத்தை நெருங்கி விட்டது. அதோ யாரோ வேகமாப் போறாங்களே யார் அது? அட பெண்ணின் சித்தியா? எதுக்கு இவ்வளவு வேகமாப் போறாங்க!

சத்திரத்துக்குள்ளே வேகமாய்ப் போன பெண்ணின் சித்தி மணப்பெண் தங்கி இருக்கும் அறைக்குப் போய் அவள் வருங்காலக் கணவனை மணமகனின் ஆங்கில முறைப்படியான உடையில் காணவேண்டி அழைக்கிறாள். முன்னெல்லாம் இம்மாதிரிப் பெண்கள் வெளிவந்து பார்க்க இயலாது. ஆகவே மாடியில் எங்காவது தோழிகள் சிலரோடு நின்று கொண்டு பார்ப்பார்கள். சில சமயம் தெரியும். பல சமயங்களிலும் பந்தல் மறைக்கும். :))) ஆனால் இப்போதெல்லாம் பெண்ணை இன்னொரு காரில் சற்றுத் தூரம் அழைத்துச் சென்று ஊர்வலம் நடக்கும் பாதையில் சென்று அங்கேயே பெண்ணையும் சேர்த்து உட்கார்ந்து வரச் சொல்லி சத்திரம் வரை அழைத்து வருகின்றனர். இது ஜானவாசம் நடக்கும் கல்யாணங்களில் மட்டுமே. பெரும்பாலான கல்யாணங்களில் ஜானவாசமே நடப்பதில்லை. ஜானவாசத்தின் மூலம் கல்யாணப்பிள்ளை பலருக்கும் அறிமுகம் ஆகின்றான். ஒரு வேளை பிள்ளையின் நடத்தைகள் சரியில்லாமல் இருந்தாலோ, அல்லது ஏற்கெனவே திருமணம் ஆகி அதை மறைத்திருந்தாலோ இம்மாதிரி ஜானவாசத்தின் மூலம் வெளிப்படுவது உண்டு. வெளிப்பட்டும் இருக்கிறது. அதன் பின்னரும் முஹூர்த்தத்தை நிறுத்தாமல் சொந்தக்காரப் பிள்ளைகளில் ஒருவரை மணமகனாக அழைத்துத் திருமணத்தை நடத்துவது உண்டு. நம்ம கல்யாண ஊர்வலம் சத்திரத்து வாசலுக்கு வந்தாச்சு. பெண்ணும் சத்திரத்து வாசலுக்கு வந்துவிட்டாள். கூடவே வந்த ஆனையும் அவளுக்கும் மாலையிடுகிறது. கொஞ்சம் பயந்து கொண்டே மாலையை ஏற்ற மணப்பெண் பின் மணமகன் அருகே சென்று அமர்கிறாள். இருவரையும் சேர்த்து வைத்துப் படங்கள் பிடிக்கப்படுகின்றன. பின்னர் இருவரும் இறங்கி சத்திரத்தின் உள்ளே செல்கின்றனர்.

பின்னர் பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. பெண்ணை அமர வைத்துப் பெண்ணின் அப்பா, அம்மா பிள்ளையார் பூஜை செய்து வழிபட்டுப் பின்னர் மந்திரோக்தமாக பிள்ளையின் தாய், தகப்பனோடு நிச்சயம் செய்து கொள்கின்றனர். இந்தப் பையருக்குத் தன் பெண்ணை நாளை கன்யாதானம் செய்து கொடுக்கப் போவதாய் அறிவிப்பார். பின்னர் பெண்ணுக்குப் பிள்ளை வீட்டார் புடைவை வைத்துக் கொடுக்கின்றனர். அதைக் கட்டிக்கொள்ள நாத்தனார் துணையோடு பெண் செல்வாள். கட்டிக் கொண்டு வந்ததும், "தலைப்பை நீளமாய் விட்டுக்கோ" என்று சொல்லியே அனுப்பி இருப்பார்கள். அதன் படியே நீளத் தலைப்போடு புடைவை கட்டிக்கொண்ட பெண் வந்ததும். முன்னெல்லாம் முழுசா மட்டைத் தேங்காய் வைப்பார்கள். இப்போல்லாம் தேங்காய்க் கீத்தை வைக்கிறாங்களானு தெரியலை. சின்னதாக ஒரு எலுமிச்சை அளவுக்கு முடிச்சைக் கொடுக்கிறாங்க. குடும்ப பாரத்தைச் சுமக்கறாளா இல்லையானு தெரிஞ்சுக்கவோ? இது விஷயம் முந்தாநாள் எங்க வீட்டுக்கு சாஸ்திரிகள் வந்தப்போ கேட்டு வைச்சுக்க நினைச்சு மறந்துடுச்சு. மீண்டும் கேட்டுச் சொல்றேன். அந்தப் புடைவையின் முந்தானையில் நடுவே அந்தப் பெரிய முடிச்சை வைச்சுக் கட்டி, இடுப்பில் சொருகிக் கொள்ளச் சொல்வார்கள். பெண் அந்த முடிச்சைக் கட்டிக் கொண்ட வண்ணமே குனிந்து நமஸ்கரிக்க வேண்டும். இப்போல்லாம் காலத்துக்கு ஏற்றாற்போல் இதெல்லாம் குறைந்துவிட்டது. பெண்ணின் நிச்சயம் முடிந்ததும் இப்போதெல்லாம் ஃபோட்டோ செஷன் ஆரம்பிக்கிறது.

என்ன தான் மறுநாள் ரிசப்ஷன் இருந்தாலும், அதுக்கு இப்போல்லாம் வட இந்திய பாணி உடை என்பதால் இந்த உடையோடு பெண், பிள்ளை இருவரும் அவரவர் சொந்தங்களோடும், தனியாகவும் படம் எடுத்துப்பாங்க.. நமக்கு இந்த ஃபோட்டோ வெளிச்சமே அலர்ஜி. உடம்புக்கு ஆகாது. ஆகவே சாப்பிடப் போகலாம் வாங்க, காலம்பர சீக்கிரமா எழுந்து தயாராகணும் இல்லையா!

நாளைய காலை டிபன் மெனு

கோதுமை அல்வா,

பைனாப்பிள் கேசரி,

உளுந்து வடை,,

இட்லி, சாம்பார், சட்னி,

பொங்கல்

உ.கி. மசால் தோசை, தக்காளிச் சட்னி, கொத்துமல்லிச் சட்னி.

படங்கள் உதவி: கூகிளார். நாதஸ்வரக் காரர்கள் படம் சொந்தக்காரர்கள் கல்யாணத்தில் எடுத்தது. :)))

மாப்பிள்ளை அழைப்பு, மாலை டிஃபன், இரவு உணவு மெனு!       காசிக்கு, காசிக்கு, காசிக்குப்போகும் சந்நியாசி!


Designed and maintained by AKR Consultants