PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

காசிக்கு, காசிக்கு, காசிக்குப்போகும் சந்நியாசி!

கல்யாணம் இன்னிக்கு. காலையிலேயே சீக்கிரம் எழுந்தாச்சு. எல்லாருக்கும் காலைக் காஃபி வந்ததா? முன்னெல்லாம் குறைஞ்ச பட்சமாகச் சின்னதாக 150 மி.லி. பிடிக்கும் எவர்சில்வர் தம்ளரில் காஃபி கொடுத்தாங்க. ஆனால் இப்போது அதுவும் கடந்த பத்து வருஷங்களாகச் சின்னதான டிஸ்போசபிள் கப்பில் கொடுக்கிறாங்க. பிடிக்கக் கூட முடியாது. பிடித்து வாயருகே கொண்டு போக முடியாமல் சிரமப்படறவங்க பலரைப்பார்த்திருக்கேன். அத்தனை சூடாகக் குடிக்க முடியாதவங்களும் உண்டு. (வெளியே போனால் எல்லாம் டிஸ்போசபிள் கப்பிலே காஃபியோ, டீயோ கொடுக்கிறவங்க கிட்டே நாங்க எங்க தம்ளரை நீட்டிடுவோம். கல்யாணங்களில் கூட!) அவங்களுக்கு ஆத்திக் குடிக்க இன்னொரு டிஸ்போசப்பிள் கப் கொடுக்கலாம். அல்லது ரயில்வேயில் கொடுக்கிறாப்போல் பேப்பர் கப் 200 பிடிக்கிறாப்போல் வாங்கி (அதைத் தண்ணீர் குடிக்கத் தராங்க) அதில் முக்கால் பாகம் ஊற்றிக் கொடுக்கலாம். மேலும் இன்னொரு விஷயம், காலை முதல் காஃபியே இம்மாதிரிச் சின்ன உத்தரணியில் கொடுப்பது பலருக்கும் அரை மனது தான். இதிலே போய் மிச்சம் பிடிக்கிறாங்க பாருனு சமையல் கான்ட்ராக்டரைக் குறை சொல்வாங்க. நேரடியாக் குற்றம் சாட்டுகிறவங்க ரொம்பவே கம்மி. ஆனால் நானெல்லாம் கான்ட்ராக்டர் கிட்டே பேச்சு, வார்த்தையின் போதே சொல்லிடுவேன். காலைக் காஃபி தம்ளரில் தான் கொடுக்கணும். அதன் பின்னர் தம்ளர் கேட்கிறவங்களுக்கு அதிலே தான் கொடுக்கணும்னு கண்டிஷன் போட்டுடுவேன். சாப்பாடுகளுக்கு ஆகும் செலவைப்போல் மூன்று மடங்குக்கும் அதிகமாகத் தான் கான்ட்ராக்டர்கள் வாங்கறாங்க. ஆகக் கூடி அவங்களுக்கு இதிலே லாபம் தான் அதிகம் இருக்கும். இதிலே ஒரு கல்யாணத்தில் மிச்சம் ஆகும் பொருட்களையும், பலகாரங்களையும் வைத்து இன்னொரு கல்யாணத்தில் அட்ஜஸ்ட் செய்வதையும் நேரிலேயே பார்த்திருக்கிறேன். மிகச் சிலரே மிஞ்சும் சாப்பாடை ஆசிரமங்கள், அநாதை விடுதிகள் எனக் கொடுக்கின்றனர். இதை எல்லாக் கான்ட்ராக்டர்களும் கடைப்பிடிக்கணும். சாப்பிடறவங்க வாயாலே பெண்ணையும், பிள்ளையையும் வாழ்த்துவாங்களே! அதுக்காகவே கொடுக்கலாம். இப்போ நம்ம கல்யாணத்துக்கு வருவோமா?

அடுத்துப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மங்கள நீராட்டு. இதைப் பெண்ணின் அத்தையோ, பிள்ளையின் அத்தையோ இருவருக்கும் எண்ணெய் வைத்தோ, அல்லது தனித்தனியாக எண்ணெய் வைத்தோ ஆரம்பித்து வைப்பார்கள். அத்தைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது குறித்து ஜீவி சார் சொன்ன கருத்து வந்து சேரவில்லை. :( பெண்ணும், பிள்ளையும் குளித்து முடித்ததும் அலங்காரம் ஆரம்பிக்கும். பெண் எப்போதுமே அலங்காரப் ப்ரியை என்பார்கள். ஆகவே பெண்ணின் அலங்காரம் அதிசயமெல்லாம் இல்லை. பையரின் அலங்க்காரம் தான் முக்கியம் இப்போ. அதைப் பார்ப்போம். மாப்பிள்ளையின் இந்த அலங்காரத்திற்குப் பரதேசிக் கோலம் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் இத்தனை நாட்கள் படிப்பு, படிப்பு என இருந்த மாணவன் இப்போது தான் திருமணத்திற்குத் தகுதி பெற்றவனாகியதால் ஆடை, அலங்காரங்கள் செய்து கொள்கிறான். ஆனால் இந்தக் காசி யாத்திரை குறித்துப் பல கதைகள் நிலவுகின்றன. ஒரு சிலர் இது தான் திருமண பந்தத்திலே இருந்து தப்பிக்கப் பிள்ளைக்குக் கிடைத்தக் கடைசிச் சந்தர்ப்பம் எனவும், வேறு சிலர் மாணவன் காசிக்குப் படிக்கச் செல்கையில் பெண் வீட்டார் வழி மறித்து எங்க பெண்ணைத் திருமணம் செய்து தருகிறேன் என்று சொல்வதால் பிள்ளை திரும்பி விடுகிறான் எனவும் சொல்கின்றனர். இன்னும் சிலர் பையர் நேரடியாக வானப்ரஸ்தம் மேற்கொள்ளக் கிளம்புவதாகவும் அதைத் தடுத்துப்பெண்ணின் தந்தை தன் பெண்ணைக் கொடுப்பதாகவும் சொல்கின்றனர். அதற்காகவே வெயிலில் இருந்து பாதுகாக்கச் செருப்பு, துஷ்ட மிருகங்களை அடக்கத் தடி, மழை, வெயிலில் பாதுகாப்புக்குக் குடை,, அவன் அறிவு பெறப் , புத்தகங்கள் எல்லாம் கொடுப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் காசி யாத்திரை எனப்படும் பரதேசிக் கோலத்தின் அர்த்தம் இது எதுவுமே இல்லை என்பதே உண்மை. அதோட இல்லாமல் இதைத் தவிர்க்க வேண்டியவற்றின் பட்டியலிலும் கூறி இருக்கிறார்கள். :)))) உண்மையான பொருள் புரியாததால் பல அனர்த்தங்கள். முதல்நாள் லக்னப் பத்திரிகை வாசிப்பதால் மறுநாள் இந்தச் சடங்கு தேவையற்றது என்பது ஒரு கருத்து. பெண்ணை நிச்சயம் செய்வது பெரியோர்கள் தான். இப்போத் தான் நிச்சயத்தில் பெண்ணும், பிள்ளையும் கலந்து கொள்கின்றனர். பொதுவாகப் பெரியோர்களே நிச்சயம் செய்கின்றனர். அதன் பின்னரே மணமகனுக்கு முறைப்படி தெரிவிக்கப்படுவதாய் ஐதீகம். அதனாலேயே இந்தக் காசி யாத்திரையை எல்லா சமூகத்தினரும் விடாமல் கடைப்பிடிக்கிறாங்களோனு நினைக்கிறேன். :)))))

முன்பெல்லாம் மாணவன் குருகுலத்தில் படித்து வந்தான். ஸமாவர்த்தனம் என்னும் கான்வகேஷன் நடந்த பின்னரே காசிக்கும் யாத்திரை சென்று வருவான். காசியாத்திரை போய் வரும் கட்டத்தில் மாணாக்கனை "ஸ்நாதகன்" எனச் சொல்கின்றனர். படிக்கும் காலத்தில் மாணவன் குருவுக்கு அடங்கியவனாக பிக்ஷை எடுத்து உணவு உண்ணும் வழக்கத்தோடு இருந்து வந்தான். வயிறு நிறையச் சாப்பிடலாம். ஆனால் அவற்றில் புலனை ஈர்க்கும் விஷயங்கள் இருத்தல் கூடாது. ஒற்றை வேஷ்டி தான் கட்டிக் கொள்ள வேண்டும். வெற்றிலை, பாக்கு,போன்றவையோ சந்தனம் போன்ற வாசனாதித் திரவியங்களோ, பயன்படுத்துதல் கூடாது. இப்போதும் நியம நிஷ்டையோடு இருக்கும் பிரமசாரிகள் வெற்றிலை, பாக்குப் போட மாட்டார்கள். உணவின் ருசியைக் குறித்துக் குறை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் சுகத்தில் மனம் போக ஆரம்பித்தால் கல்வியில் குறைபாடு ஏற்படும். பனிரண்டு வருஷங்கள் இப்படி இருந்து குருகுல வாசத்தை முடித்த மாணவனை கிரஹஸ்தாசிரமம் ஏற்க வேண்டும் என்பது தர்ம சாஸ்திரம் சொல்லும் ஆலோசனை. ஆகவே அவன் இல்லறம் ஏற்க வசதியாக இப்போது ஆடை, மாலை, சந்தனம், குங்குமம், குடை, தடி, விசிறி, செருப்பு போன்றவை பயன்படுத்துவதோடு வாசனாதி திரவியங்களும் பயன்படுத்துவான். அவன் படித்தவன் என்பதை உலகோருக்குக் காட்டும் வண்ணம் கையில் ஒரு புத்தகம், (முன் காலங்களில் சுவடிகள்) இருக்கும். பார்க்கப் போகும் பெண்ணின் கண்களுக்கு அழகனாகத் திகழ வேண்டாமா? ஆகவே அவன் தன்னைத் தானே அழகு படுத்திக்கொள்வதோடு உறவினரும் உதவுகின்றனர். ஆசாரியரும் இனி அவனுக்கு ஒற்றை வேஷ்டி தேவையில்லை எனப் பஞ்சகச்சம் பரிந்துரைக்கிறார்.

இல்லறம் விரும்பும் மாணவன் தானாகப் பெண்ணைக் கேட்டுப் பெற முடியாது என்பதால் தக்கவர்களை அணுகி அவர்கள் மூலம் பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான். அப்போது தான் பெண்ணின் தகப்பனார் அவன் குலம், கோத்திரம் மட்டுமல்லாது படிப்புப் போன்ற தகுதிகளையும் அவன் விருப்பத்தையும் நன்கு அறிந்து கொண்டு தான் தன் பெண்ணை அந்தப் பிள்ளைக்கே தருவதாக ஒத்துக் கொள்கிறார். ஆனானப்பட்ட பரமசிவனுக்கே சப்தரிஷிகள் அனைவருமாகச் சென்று ஹிமவானிடம் பெண் கேட்க வேண்டி இருந்ததே! பெண்ணைக் கொடுப்பதன் மூலம் அத்தனை நாட்கள் பெண்ணிடம் தனக்கிருந்த உரிமையை அகற்றி மணமகனிடம் ஒப்படைக்கிறார் பெண்ணின் தந்தை. இதுவே பரதேசிக் கோலம் என்று இன்றைய நாட்களில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டிருக்கிறது. உண்மையில் பெண்ணை உரியவரிடம் ஒப்படைக்கும் ஒரு நிகழ்வே காசியாத்திரை அல்லது பரதேசிக்கோலம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இத்தோடு ஸமாவர்த்தனம் நிறைவு அடைகிறது. அடுத்து டும் டும் மேளம் கொட்டிக் கல்யாணச் சேதிதான்.

ஹிஹிஹி, படத்துக்கு மன்னாப்புக் கேட்டுக்கிறேன். திட்டாதீங்க. யாருக்கானும் பிடிக்கலைனா எடுத்துடறேன். :)))))) இங்கே எடுக்க முடியாது. மன்னாப்பு, மன்னாப்பு!

காசியாத்திரை எனப்படும் பரதேசிக் கோலம் குறித்த விளக்கங்களுக்கு நன்றி காமகோடி தளம்.

பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!       மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்!


Designed and maintained by AKR Consultants