PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

குணமிருக்கும் குலமகளே வா, வா!

வல்லி நினைவூட்டினாங்க. கல்யாணப் பிள்ளை காசியாத்திரைனு செல்கையில் பிள்ளையின் அம்மா, அப்பா, மாமாக்கள், அத்தைகள் போன்ற உறவினரும் கூடச் செல்வார்கள். பிள்ளையின் மாமாவோ அத்தை கணவரோ குடை பிடித்துச் செல்வார்கள். பிள்ளையின் அம்மா கையில் கூரைப்புடைவை மற்றும், திருமாங்கல்யம் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிறு, முஹூர்த்தப் பருப்புத் தேங்காய் உள்ள தட்டு இருக்கும். கனம் அதிகமாக இருந்தால் பிரிச்சு பருப்புத் தேங்காயை ஒரு தட்டிலும், புடைவை, திருமாங்கல்யம், பெண்ணுக்கு பிள்ளை வீட்டினர் நகை போட்டால் அவை இன்னொரு தட்டிலும் வைத்து முக்கிய உறவினர் எடுத்துச் செல்வார்கள். பிள்ளையின் அம்மா கையில் கட்டாயமாய் கூறைப்புடைவை இருக்கும். பிள்ளையின் சகோதரியோ மாலை தன் சகோதரனும், சகோதரன் மனைவியும் நலுங்கில் விளையாடுவதற்கான விளையாட்டுப் பொருட்களோடு, சகோதரன் மனைவிக்காகப் புதுச் சேலையும் எடுத்து வைத்து அவற்றை ஒரு தட்டில் வரிசைப்படுத்தி அலங்கரித்து எடுத்து வருவாள். இவற்றோடு எல்லாரும் இப்போ மணமேடைக்குப் போயாகிவிட்டது. இப்போ கன்யாதானம் நடைபெறப் போகிறது. அனைவரும் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

கல்யாணத்திற்கு வந்திருக்கும் நிறைந்த சபையில், பெரியோர்களின் முன்னிலையில் வேத மந்திரங்களின் கோஷத்தோடு நடைபெறும் கன்யாதானம். பெண் இருந்தாலே வீடு முழுமை பெறும் என்பது மறுக்கவோ/மறைக்கவோ முடியாத உண்மை. இதைத் தான் மநுவும் சொல்லி இருக்கிறார். க்ருஹத்தில் முக்கியமானவள் க்ருஹணீ என்னும் பெண்ணுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கார். இருங்க, இருங்க, மநு அப்படி எல்லாம் சொல்லலைனு சொல்றவங்களுக்கு! அதைத் தனியா வைச்சுப்போமா? மநு சொன்னதை யாருமே சரியாப் புரிஞ்சுக்கலை என்பதே உண்மை என்பதோடு இப்போ நிறுத்திப்போம். பெண்ணின் அப்பா பிள்ளையாரை வேண்டிக்கொண்டு மஹாவிஷ்ணுவைப் பூஜிப்பார். இங்கே இப்போது மாப்பிள்ளை தான் மஹாவிஷ்ணு சொரூபம். ஆகவே மாப்பிள்ளைக்குத் தான் ஆசனம் கொடுத்து வரவேற்று, பெண்ணின் அம்மா துணை செய்ய அவர் பாதங்களை அலம்பித் துடைத்து, பாலிட்டு, சந்தனம் குங்குமம் வைப்பார்கள். இதுக்கு எனப் பாலிடும் கிண்ணம்னு வெள்ளியிலே வாங்கி மாப்பிள்ளைக்குக் கொடுத்திருப்பாங்க. பின்னர் கிழக்கே பார்த்துப் பெண்ணின் அப்பா நிற்கப் பிள்ளை எதிரே மாமனாரைப் பார்த்துக் கொண்டு நிற்பார். பெண் தந்தை மடியில் அமர்ந்திருப்பாள். பெண்ணின் அம்மாவும் அருகே இருப்பார்.

இப்போக் கன்யாதானம் நடைபெறுகையில் பெண்ணின் பெயரையும், பிள்ளையின் பெயரையும் மூன்று முறை சொல்லுவார்கள். மூன்று முறை சொல்வதன் மூலம் அது முழுமை பெறுகிறதாக ஐதீகம். அனைத்துப் பெரியோர்களுக்கும் தெரியும்படியாகப் பெண்ணின் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் பெயரை வரிசைக்கிரமமாகச் சொல்வார்கள். உதாரணமாக எங்க பெண்ணின் கல்யாணத்தில், என் மாமனாரின் அப்பா பெயர் ஶ்ரீநிவாசன். ஆகவே ஶ்ரீவத்ஸ கோத்திர, ஶ்ரீநிவாச சர்மாவின் கொள்ளுப் பேத்தியும், குஞ்சிதபாதம் ஐயரின் பேத்தியும், சாம்பசிவ ஐயரின் பெண்ணும் ஆன என்று சொல்வார்கள். அதே போல் பிள்ளை தரப்பிலும் பிள்ளையின் கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் பெயர்கள் சொல்லி இன்னாரின் கொள்ளுப்பேரன், இன்னாரின் பேரன், இன்னாரின் மகன் என அறிவிக்கப்படும். இவருக்கு எங்கள் மகளை முழு மனதோடு தாரை வார்த்துக் கொடுக்கிறேன்னு அப்பா சொல்வார். மாப்பிள்ளைப் பெண்ணை தானம் வாங்கிக் கொள்வார். பின்னர் புதுப்பாயில் அமர்ந்து கொண்டு அக்னி வளர்க்கச் செல்வார்கள். பெண்ணின் அப்பா மாப்பிள்ளைக்கு மதுபர்க்கம் என்னும் தயிரில் தேன் கலந்த திரவத்தைக் கொடுப்பார். பசுமாடு தானம் கொடுக்கணும்னும் ஐதீகம். ஆனால் கொடுக்கிறதில்லை. இந்த மதுபர்க்கம் தான் மாப்பிள்ளைக்கு ஆகாரம். என்றாலும் சிலரோட சம்பிரதாயப்படி இதன் பின்னர் மாப்பிள்ளைக்குச் சாப்பிடவும் கொடுப்பாங்க. எங்களுக்கெல்லாம் பெரிய நாமம் தான்! :)))) அடுத்து மாப்பிள்ளைப் பெண்ணுக்குச் சில சுத்தி சமஸ்காரங்கள் செய்யணும்.

அப்போது பெண்ணைத் தகப்பன் மடியில் அமர்த்தி இருப்பார்கள். மாப்பிள்ளை மந்திரங்கள் சொல்லிக் கொண்டே தர்ப்பைப்புல்லால் பெண்ணின் புருவ மத்தியைத் தடவி அதை மேற்குத் திசையில் போடுவார். தர்ப்பையால் செய்யப்பட்டதொரு பிரிமணையை/ வளையத்தைப் பெண்ணின் தலையில் வைத்து அதன் மேல் நுகத்தடியை வைப்பார்கள். அதன் மேல் பெண்ணின்கழுத்தில் கட்டப்படவிருக்கும் தாலிக்கயிற்றில் திருமங்கல்யம் கோர்க்கப்பட்டிருக்கிறதை தங்கத் தாலியை அதிலுள்ள இடைவெளியில் வைத்து ஐந்து முறை மந்திரங்கள் ஜபிக்கப்பட்ட நீரை ஊற்றுவார்கள். இதை புரோகிதர்கள் சொன்னாலும் அந்த மந்திரங்களைத் திரும்பச் சொல்லிச் செய்வது எல்லாம் கல்யாண மாப்பிள்ளையே. மந்திரங்களின் பொருள் என்னவென்றால், இந்தத் தங்கம் ஒன்று, பத்தாக நூறாக உன் குடும்பத்தில் பெருகட்டும். மந்திரங்களால் ஜபிக்கப்பட்ட இந்தப் புனித நீரால் உன் திருமண வாழ்க்கை/இல்லற வாழ்க்கை மேம்படட்டும். உன் குடும்பம் செழுமை பெற்று வளரட்டும். உன் கணவனுக்கு உன்னை நீ அர்ப்பணிப்பாயாக!

ஒரு சிலர் தங்கம் மட்டும் வைத்தால் போதும். தாலியை வைக்கணும்னு இல்லைனு சொல்றாங்க. ஆனால் அந்த நேரத்தில் சுலபமாகக் கிடைப்பது தங்கத் தாலி தான் என்பதால் தங்கத்தாலியையே வைக்கிறாங்கனு நினைக்கிறேன். பின்னர் மணமகன் மந்திரங்கள் ஓதப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட கூறைப்புடைவையைப் பெண்ணிற்குக் கொடுப்பார். அதாங்க கூறைப்புடைவை. அந்தப் புடைவையைக் கட்டிக் கொண்டு பெண் வந்த பின்னரே மற்ற சம்ஸ்காரங்கள் ஆரம்பம். இந்தக் கூறைப்புடைவையைக் கட்டிக்கொள்ள/அதாவது கட்டிவிடப் பெண்ணின் நாத்தனாரைத் தான் அனுப்புவாங்க. இதெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் இம்மாதிரி நெருங்குவதன் மூலம், உறவின் அந்நியோந்நியம் இன்னும் இறுகும் என்பதற்காக ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். இப்போல்லாம் இது கட்டிவிடனு தனியாகப் பணம் கொடுத்து ஆளை வரவழைக்கிறாங்க. இன்னும் ப்யூட்டி பார்லர் காரங்களுக்குக் கூறைப் புடைவை கட்டிவிடத் தெரியலை.

ஆச்சு, பெண் புடைவை கட்டிக்கப்போயாச்சு. இங்கே எல்லாரும் வெட்டி அரட்டை அடிக்காம ஏதோ வேதகோஷம் சொல்லிட்டு இருக்காங்க. அதுவரை நல்லது. பெண் புடைவை கட்டிண்டு வரட்டும். இப்போத் தான் அனைவராலும் பல முறை விமரிசிக்கப்பட்டு ஏற்கெனவே இதுக்கு விளக்கம் கொடுத்த முக்கியமான மந்திரங்கள் வருகின்றன. அதை கொஞ்சம் விரிவாகவே அடுத்த பதிவில் பார்ப்போம்.

மற்ற சமூகங்களில், முக்கியமாக வைணவர்களில் பெண்ணின் தலை அலங்காரம் ஆண்டாள் கொண்டையாக மாற்றப்படும். ஆண்டாளைப் போல் வலப்பக்கம் கொண்டை போட்டுப் பின்னால் பின்னித் தொங்கவிட்டு அலங்கரித்து ஒன்பது கஜம் புடைவை கட்டிப் பெண்ணை அழைத்து வருவார்கள். தெலுங்கு பிராமணர்களிலும், மற்ற சில சமூகங்களிலும் வெள்ளையில் மஞ்சள் நீரால் நனைத்த நூல் புடைவையை உள் கச்சம் போட்டு இடப்பக்கத் தலைப்போடு கட்டிக் கூட்டி வருகிறார்கள். நம் தமிழ்நாட்டிலேயே பிராமணரல்லாத மற்ற சமூகங்களில் கொஞ்சம் அரக்கு, கொஞ்சம் பிங்க் என்று சொல்லும்படியான ஒரு வர்ணத்தில் நூலால் ஆன கைத்தறிப் புடைவையைத் தான் கட்டிக் கொள்கிறாள் மணப்பெண். தமிழ்நாட்டுப் பிராமண சமூகத்தில் மட்டுமே ஆடம்பரமாகப் பட்டுப்புடைவை கட்டிக் கொள்கின்றனர். :))))))

ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கத் தேரிலே!       கெட்டி மேளம் கொட்டக் கொட்ட! ஒரு சில மந்திரங்களின் அர்த்தங்கள்.


Designed and maintained by AKR Consultants