PLEASE CONTACT:

Hema AKR: 9003477272
          AKR: 9789581797

பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை - அலுவலகங்கள்


  brahminshoroscopeexchange.com
      Brahmins Horoscope Exchange Service
  Email: brahminshoroscopeexchange@gmail.com

என்ன கல்யாணமடி கல்யாணம்

BACK TO ARTICLES PAGE  

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் அர்த்தம்!

மணமகனையும், மணமகளையும் அப்படியே உட்கார்த்தி வைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. கடைசியா பாணிக்ரஹணம் குறித்துப் பார்த்தோம். மணமகன் தன் வலக்கையால் மணமகளின் கரத்தைப் பிடிப்பதற்கும் நான்கு மந்திரங்கள் உண்டு. பிராமணர் தவிர மற்ற சமூகங்களில் இதன் பின்னரே மாலை மாற்றலும் நடக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இதன் பின்னர் அக்னிக்கு வடக்கே மணமகன் மணப்பெண்ணின் வலக்கையைப் பிடித்தவாறே அவள் வலக்காலைத் தன் இடக்கையால் தொட்டுக் கிழக்கே பார்த்தோ அல்லது வடக்குத் திசையிலேயோ பாதத்தை எடுத்து வைத்து அவளுடன் நடந்து செல்லவேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம் உண்டு. 7 அடிகள் எடுத்து வைக்க வேண்டும். சாஸ்திரப் படி ஏழு அடிகள் ஒருத்தருடன் எடுத்து வைத்து நடந்தால் அவர் நம் நண்பர் ஆகிவிடுவார் என்று ஆகிறது. சாவித்திரி சத்யவானின் உயிரைக் காப்பாற்ற வேண்டி யமதர்ம ராஜனோடு இப்படித் தான் ஏழடிகள் எடுத்து வைத்துப் பின்னர் யமனின் நண்பன் என்ற ஹோதாவில் அவனிடமே வரங்களை வேண்டிப் பெற்றுத் தன் கணவனின் உயிரையும் மீட்டு வருவாள் என்று படித்திருக்கிறோம் அல்லவா! அதே போல் இங்கே மணமகளோடு சேர்ந்து ஏழடி எடுத்து வைக்கும் மணமகன் தன் மனைவியைத் தன் சிநேகிதியாகவே கருத வேண்டும். இத்தனையும் செய்கையில் பிடித்த வலக்கையை விடவே கூடாது. இது தான் திருமணத்தின் முக்கியக் கர்மாவாகும். சட்டப்படியும் இந்த சப்தபதி ஆனாலே திருமணம் நிறைவு பெற்றுத் திருமணம் சட்டரீதியாகவும் செல்லுபடி ஆகும்.

மந்திரங்கள் என்று சொன்னாலும் இன்னொரு விதத்தில் இது மணமகன் - மணமகள் இடையே நடக்கும் உரையாடல் என்றும் சொல்லலாம். மணமகன் தன் மனைவியிடம் தாங்கள் இருவரும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு வாசகத்தைப் பேசுவான்.

முதல் அடி: நீ என் வீட்டுக்கு வருகிறாய். மஹாலக்ஷ்மி போன்ற உன் வரவால் என்ன் குலம் விருத்தி அடையட்டும். நீ மட்டும் சந்தோஷம் அடையாமல் என்னையும் சந்தோஷப் படுத்தப் போகிறாய். எல்லாவற்றிலும் முக்கியமான உணவுப் பொருட்கள் உன்னால் விருத்தி அடைந்து நீ என் இல்லம் வரும்போது நிறைந்து இருக்க அந்த மஹாவிஷ்ணு அருளட்டும்.

இரண்டாம் அடி:காக்கும் கடவுளான மஹாவிஷ்ணு என் வீட்டில் வந்து இருப்பதற்கு வேண்டிய உடல் வலிமையை உனக்குத் தரட்டும். அவன் அருளால் உன் எண்ணங்கள் நிறைவேறட்டும்.

மூன்றாம் அடி: நாம் இருவரும் சேர்ந்து வாழப்போகும் இந்தப் புதிய வாழ்க்கையில் சாஸ்திர சம்பிரதாயங்களையும் அவற்றால் ஏற்படுத்தப்பட்ட சட்ட, திட்டங்களை மீறாமலும், கடமையுடன் நாம் செயலாற்றும்படியும், அதற்கான நம்பிக்கைக்காகவும் இறைவன் நம்முடன் ஒத்துழைப்பானாக!

நான்காம் அடி: இவ்வுலக வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை நாம் இருவரும் முழுமையாக அனுபவிக்க வேண்டும். அனைத்துச் சுகங்களும் என்னோடு சேர்ந்த உனக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

ஐந்தாம் அடி: சுக,போகங்களை அனுபவிக்கத் தேவையான வீடு, வாசல், நிலம், கால்நடைச் செல்வங்கள் போன்றவையும் நிறைந்து இருக்குமாறு கடவுள் அருளட்டும்.

ஆறாம் அடி: பருவகால மாற்றங்களினால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் நம்மைத் தாக்கினால் வாழ்வின் சுவை குன்றாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நம் மனங்களுக்குத் தருமாறு அந்தக் கடவுள் அருளட்டும்.

ஏழாம் அடி: நம் வாழ்க்கையில் வெறும் சுகத்தை மட்டுமே பார்க்க மாட்டோம். எல்லாவற்றையுமே அனுபவிப்போம். அதற்கு அடிப்படையான இயற்கைச் சக்திகளான, மழை, வெயில், பனி போன்றவை அந்த அந்தப் பருவத்தில் தவறாமல் ஏற்படுவதற்கு உதவி புரியும் கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தியை வணங்கவும், அதற்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நாம் இருவரும் சேர்ந்து நிறைவேற்றவும் ஆண்டவன் அருளட்டும்.

இவ்வாறு திருமண வாழ்க்கையில் ஈடுபடும் மணமகனும், மணமகளும் தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உலக க்ஷேமத்துக்கும் சேர்த்துப் பிரார்த்திப்பான். இதன் மூலம் இருவருக்கும் மனத்தெளிவு உண்டாகி ஆன்மிகப் பாதையில் செல்ல வேண்டிய பக்குவம் ஏற்படும். இந்தப் பிறவியின் கடமைகளை ஆற்றவேண்டுமானால் இயற்கைச் சக்திகளும் உதவ வேண்டும் அல்லவா? அதற்கும் கடமைப்பட்டிருப்பதால் அவற்றுக்கும் சேர்ந்து நன்றிக்கடனை வேள்விகள், பூஜைகள் மூலம் நிறைவேற்றுவார்கள் தம்பதியர். இப்படி அறம் சார்ந்த வாழ்க்கையே இல்லறம் எனப்பட்டது.

கல்யாணத்தில் மந்திரங்கள் சொல்லும் பொருள் என்ன? ஒரு பார்வை!       பஞ்சாக்னி வித்யை


Designed and maintained by AKR Consultants